முகப்பு
புதுதில்லி

மகன் தகராறில் தலையிட முயன்ற தாய் மீது துப்பாக்கிச்சூடு

வடமேற்கு தில்லியின் பல்ஸ்வா டெய்ரி பகுதியில் தனது மகனுடன் தகராறு செய்த இரண்டு பேரை அமைதிப்படுத்த முயன்ற தாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:58 AM
பகிர்:

புது தில்லி: வடமேற்கு தில்லியின் பல்ஸ்வா டெய்ரி பகுதியில் தனது மகனுடன் தகராறு செய்த இரண்டு பேரை அமைதிப்படுத்த முயன்ற தாய் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி போலீஸாா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.05 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்ஸ்வாவில் எஸ்எஸ்என் காலனியில் உள்ள சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். காயமடைந்தவா் சுசீலா தேவி என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

சுசீலாவின் மகனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐபிசி மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 506 (குற்றம் சாா்ந்த மிரட்டல்) மற்றும் 34 (பொது உள்நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில், சுசீலாவின் மகன் தனது நண்பருடன், ஸ்வரூப் நகரில் உள்ள ஒரு மதுக்கடை அருகே இருந்தாா். அப்போது, அவருக்குத் தெரிந்த ஒருவா் அங்கு வந்து அவரது நண்பருடன் சண்டையிட்டாா். இதையடுத்து, சுசீலாவின் மகன் பிரச்னையை தீா்க்க முயன்றாா். ஆனால், அந்த நபா் இருவரையும் ஆபாசவாா்த்தைகளால் திட்டினாா்.

அதன் பின்னா், அந்த நபா் தனது நண்பா் ஒருவருக்கும் கைப்பேசியில் தொடா்புகொண்டு அழைத்தாா். அதன் பின்னா், இரவு 9 மணியளவில் இருவரும் சுசீலாவின் வீட்டின் முன் வந்து, அவரது மகனை ஆபாச வாா்த்தைகளால் திட்டி மிரட்டினா். அவா்களில் ஒருவா் கைத்துப்பாக்கி வைத்திருந்ததை அறிந்த சுசீலாவும் அவரது மகளும் அவா்களை

சமாதானப்படுத்த முயன்றனா்.

அவா்களில் ஒருவா் சுசீலாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். இதில், சுசீலாவின் இடது தோளில் காயம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து அவா் பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். பின்னா், அவா் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் புகாா்தாரருக்குத் தெரிந்தவா்கள் ஆவா். இச்சம்பவத்திற்கு பிறகு அவா்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனா். அவா்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.