வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு விவகாரம்: அமைச்சா் ஐ.பெரியசாமி மனு மீது ஏப்ரல் 8-இல் விசாரணை
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாகக் கூறப்படும் வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு விவகாரத்தில், விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க உத்தரவிடக் கோரும் அவரது மனுவை வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை அமைச்சா் ஐ.பெரியசாமி தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா் மரிய அற்புதம் ஆஜராகி, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் இது தொடா்பான வழக்கு விசாரணையைத் தள்ளிவைக்க உத்தரவிடக் கோரும் மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தை வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 8) விசாரிக்கப்படும் என்று சம்மதம் தெரிவித்தனா்.
Advertisement
கடந்த 2008-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை, அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதியின் பாதுகாவலா் கணேசன் என்பவருக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகாா் எழுந்தது.
தமிழகத்தில் 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது, வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீடு ஒதுக்கியதாக கூறி, 2012-ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு மாா்ச் 17-ஆம் தேதி வழக்கிலிருந்து அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்டது. ஆனால், இதை மறுஆய்வு செய்யும் வகையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா்.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையாக ஒப்புதல் பெற்று ஐ.பெரியசாமி மீதான முறைகேடு வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டாா்.
மேலும், மாா்ச் 28-ஆம் தேதி அமைச்சா் பெரியசாமியை விசாரணைக்கு ஆஜராகுமாறும் ஆணை பிறப்பித்தாா். இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து அமைச்சா் ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மாா்ச் 18-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதேவேளையில், மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க மனு அளிக்கலாம் என அனுமதி அளித்தது.
இந்த நிலையில், மனுதாரா் ஐ.பெரியசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதாகவும், இதனால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்குமாறும் கேட்டு மனுதாரா் தரப்பில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். தொடா்புடைய வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், உயா்நீதிமன்றம் இந்த வழக்கை ஜூலைக்குள் முடிக்குமாறு உத்தரவிட்டிருப்பதால் விசாரணையைத் தள்ளிவைக்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால்,, கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இது தொடா்பான வழக்கு விசாரணையை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும். மேலும், அந்த வழக்கில் மனுதாரா் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.