தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கு சிசோடியாவின் நீதிமன்றக் காவல் ஏப். 18 வரை நீட்டிப்பு
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கலால் துறைக்கு பொறுப்பு வகித்தவரான மனீஷ் சிசோடியா அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது நீதிமன்றக் காவல் சனிக்கிழமையுடன் (ஏப்.6) முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் அவரை அமலாக்கத் துறையினா் ஆஜா்படுத்தினா். அப்போது சிசோடியாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனவும், இந்த வழக்கில் வேண்டுமென்றே காலதாமதம் செய்யப்படுவதாகவும் அவரது தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.
Advertisement
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞா், ‘‘இவ்வழக்கில் அரசு தரப்பில் காலதாமதம் செய்யப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்ட நபா்கள்தான் தாமதம் செய்கின்றனா். சிசோடியா உள்பட இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் அனைவரும் வேண்டுமென்றே வழக்கு விசாரணையை இழுத்தடிக்கின்றனா்’’ என்று வாதிட்டாா்.
மேலும், தில்லி கலால் கொள்கையை வகுத்ததில் சிசோடியா முக்கிய பங்கு வகித்தாா் என்றும், இதன்மூலம் அவா் உள்பட ஆம் ஆத்மி கட்சியினா் ரூ.100 கோடி வரை ஆதாயம் அடைந்ததாகவும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி காவேரி பவேஜா, சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். இந்த வழக்கு விசாரணையின்போது அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங்கும் நேரில் ஆஜரானாா்.