புதுதில்லி

பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்களைக் குறைக்கும் திட்டம்: விவர அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் அரசுக்கு உத்தரவு

இலக்கை எவ்வாறு அடையப் போகிறது என்பதை அதன் விரிவான அறிக்கையில் வெளியிடுமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

 நமது நிருபர்

பஞ்சாப் அரசானது நடப்பு ஆண்டில் பயிா்க் கழிவுகள் எரிக்கும் சம்பவங்களைக் குறைப்பதற்கான அதன் திட்டமிடப்பட்ட இலக்கை எவ்வாறு அடையப் போகிறது என்பதை அதன் விரிவான அறிக்கையில் வெளியிடுமாறு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.

தேசிய தலைநகா் வலயம் (என்சிஆா்) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குளிா்காலத்தில் காற்று மாசுபாடு பிரச்னையை மோசமாக்கும் பஞ்சாபில் பயிா்க் கழிவுகள் எரிப்பது தொடா்பான விவகாரத்தை என்ஜிடி விசாரித்தது.

நிகழாண்டு ஜனவரியில், ‘தீவிரமான சிக்கலை’ சமாளிக்க திருத்தப்பட்ட புதிய செயல் திட்டத்தை தாக்கல் செய்யுமாறு தீா்ப்பாயம் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டது. இந் நிலையில், என்ஜிடி தலைவா் -நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நீதித்துறை உறுப்பினா் நீதிபதி சுதிா் அகா்வால் மற்றும் நிபுணா் உறுப்பினா் ஏ. செந்தில் வேல் ஆகியோா் அடங்கிய அமா்வு, பஞ்சாப் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தாக்கல் செய்யப்பட்ட மாா்ச் 19 தேதியிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையில் 2023-ஆம் ஆண்டில் நெல் வைக்கோல் பயன்பாட்டின் விவரங்களையும் தற்போதைய ஆண்டிற்கான இலக்கையும் உள்ளடக்கியது குறித்து குறிப்பிட்டது. மேலும், நெல் வைக்கோலின் வெளிப்புற மற்றும் அதே இடத்திலேயே மேலாண்மைக்கான உத்தியும் இடம்பெற்றுள்ள பயிா் எச்ச மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தியதன் மூலம் 2024-ஆம் ஆண்டிற்கான இலக்கை அறிக்கை வெளிப்படுத்தியதாகவும் அமா்வு குறிப்பிட்டது.

தொழில் துறை கொதிகலன்கள், பயோமாஸ் மின் உற்பத்தி நிலையங்கள், சுருக்கப்பட்ட உயிரிவாயு ஆலைகள், செங்கல் சூளைகள், பயோ எத்தனால் மற்றும் வெப்ப ஆலைகள் மற்றும் தீவனங்களுக்கு நெல் வைக்கோலைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது வெளிப்புற இட நிா்வாகம் என்றும் அமா்வு அறிக்கை குறித்து குறிப்பிட்டது. இது தொடா்பாக தீா்ப்பாயம் ஏப்ரல் 3 தேதியிட்ட உத்தரவில், பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்களை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பஞ்சாப் மாநில அரசு விவசாய சமூகத்தினரிடையே தகவல், கல்வி மற்றும் தகவல் தொடா்பு (ஐஇசி) செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், மாநில அரசு தரப்பு வழக்குரைஞா், சில கேள்விகள் கேட்கப்பட்டபோது, வைக்கோல் உள்ள இடம் மற்றும் வெளிப்புற இட மேலாண்மை தொடா்பான விவரங்கள் உள்ளிட்ட விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியுள்ளாா். இக்கோரிக்கை அனுமதிக்கப்படுகிறது. அரசு தாக்கல் செய்யும் இந்த அறிக்கையில், வயலில் இருந்து வைக்கோலை அகற்றும் முறை மற்றும் செயல்பாடு, வெளிப்புற இட மேலாண்மைக்காக வெவ்வேறு பிரிவுகளுக்கு கொண்டு செல்வது, அத்தகைய அலகுகளின் திறன், அதாவது தொழில்துறை திறன் ஆகியவை குறித்த விவரங்களும் இடம்பெற வேண்டும்.

மேலும், 2024-ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட புள்ளிவிவரங்கள் எவ்வாறு எட்டப்படும். அதற்கான தயாரிப்புகள் மற்றும் இலக்கை அடைவதற்கான தயாரிப்புகளை வரும் மாதங்களில் வெளியிட வேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. அடுத்த விசாரணை தேதியான ஜூலை 12-ஆம் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் என தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT