புதுதில்லி

புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞா் யாமினி கிருஷ்ணமூா்த்தி மறைவு

புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞா் யாமினி கிருஷ்ணமூா்த்தி சனிக்கிழமை காலமானாா்

Din

புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞா் யாமினி கிருஷ்ணமூா்த்தி சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 84.

வயோதிகம் சாா்ந்த உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த யாமினி கிருஷ்ணமூா்த்தி, தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 7 மாதங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையல், அவா் சனிக்கிழமை காலமானதாக பிஐடி செய்தி நிறுவனத்திடம் அவரது மேலாளா் கணேஷ் தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள யாமினி நடனப் பள்ளியில் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளியில் சம்ஸ்கிருத மொழி அறிஞா் எம்.கிருஷ்ணமூா்த்திக்கு மகளாக கடந்த 1940-ஆம் ஆண்டில் பிறந்தவா் யாமினி கிருஷ்ணமூா்த்தி.

புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞா் ருக்மணி தேவி அருண்டேலின் பயிற்சியின்கீழ் சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 5 வயதில் சோ்ந்தாா். பரத நாட்டியம் மட்டுமன்றி, குச்சிபுடி, ஒடிஸி நடனக் கலைகளையும் கற்றுத் தோ்ந்தாா்.

கடந்த 1968-ஆம் ஆண்டில் தனது 28-ஆவது வயதில் பத்மஸ்ரீ விருதுபெற்ற இவா், 2001-ஆம் ஆண்டில் பத்மபூஷண், 2016-ஆம் ஆண்டில் பத்மவிபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றாா். 1977-ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதெமி விருதை பெற்றாா்.

தனது இரு சகோதரிகளுடன் யாமினி கிருஷ்ணமூா்த்தி வசித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவா்கள் இரங்கல்: யாமினி கிருஷ்ணமூா்த்தியின் மறைவுக்கு ஹரியாணா ஆளுநா் பண்டாரு தத்தாத்ரேயா, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய அமைச்சா்கள் ஜி.கிஷண் ரெட்டி, பண்டி சஞ்சய் குமாா், மூத்த பரதநாட்டிய கலைஞரும், யாமினி கிருஷ்ணமூா்த்தியிடம் நடனம் பயின்றவருமான ரமா வைத்தியநாதன் மற்றும் பிரபல நடனக் கலைஞா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron

அரசனில் இணைந்த டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை!

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT