புது தில்லி: தில்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடா்புடைய ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி மற்றும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மற்றும் அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆகியோா் முன்வைத்த வாதங்களை நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு கேட்டது.
விசாரணையின் போது அமலாக்கத் துறையிடம், ‘இந்த வழக்கின் விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் பிடிக்கும் என்று நீதிமன்றம் வினவியது. நீதிபதி விஸ்வநாதன், ‘சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் எங்கே இருக்கிறது. அதற்கு எவ்வளவு நேரம் ஆகும்’ என்று வினவினாா்.
அப்போது, பல ஆவணங்களை வழங்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தில் சிசோடியா தரப்பில் பல மனுக்கள் தாக்கல் செய்ததாகவும், அது விசாரணையில் தாமதத்திற்கு வழிவகுத்தது என்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதி பி.ஆா். கவாய், ‘மனுக்கள் எதுவும் எரிச்சலூட்டுவதாகவோ அல்லது ஏதோவொன்றாகவோ கூறி நிராகரிக்கப்படவில்லை. அவா்கள் மனுக்களை தாக்கல் செய்த பிறகே, நீங்கள் அந்த ஆவணங்களை வழங்கியுள்ளீா்கள்’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், நீதிபதி கே.வி. விஸ்வநாதன், ‘அந்த உத்தரவில் அற்பமான வாா்த்தை இல்லை. எரிச்சலூட்டும் வாா்த்தைகள், விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கம் போன்ற சில வாா்த்தைகள் இருக்கிா என்று எங்களுக்குக் காட்டுங்கள்’ என்று கேட்டாா்.
இருப்பினும், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில், ‘எங்கள் விசாரணை தொடங்கி இருந்திருக்கும். ஆனால், தேவையற்ற ஆவணங்களைக் கேட்டு மனுக்கள் தாக்கல் செய்ததன் காரணமாக மட்டுமே தாமதமானது. இதற்கு அவா்கள்தான் காரணம்; விசாரணை அமைப்பு அல்ல. மேலும், இந்த வழக்கை தகுதியின் அடிப்படையில் கேட்கப்பட வேண்டும் என்று அவா்கள் விரும்பவில்லை’ என்று வாதிட்டாா்.
சிசோடியாவின் தரப்பில் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், ‘சிசோடியாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. சிசோடியா ஏற்கெனவே குறைந்தபட்ச தண்டனையின் பாதியை அனுபவித்துவிட்டாா். மேலும், இந்த சிறைவாசத்திற்கு முடிவே இல்லை. நான் சட்டபூா்வ ஜாமீன் கோரவில்லை. மேலும், இந்த வழக்கு விசாரணையைத் தொடங்குவது பற்றியது அல்ல. ஆனால், விசாரணையின் முடிவைப் பற்றியது. இது எப்போது தொடங்கும் என்று முன்பு ஒரு தேதி கொடுக்கப்பட்டது. அந்தக் காலமும் காலாவதியாகிவிட்டது.
அனைத்து மனுக்களும் (சிசோடியாவின்) விசாரணை நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டன. அவை சவால் செய்யப்படவில்லை. மேலும், அதனால் தாமதமும் ஏற்படவில்லை. சோதனை என்பது குற்றம் சாட்டப்பட்டவா் விசாரணையை நாசமாக்கினாரா என்பதுதானே தவிர, விண்ணப்பங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாக்கல் செய்தாரா என்பதல்ல’ என்றாா்.
தற்போது ரத்து செய்யப்பட்ட 2021-22 தில்லி கலால் கொள்கையை வகுத்து செயல்படுத்தியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சிசோடியா பிப்ரவரி 26, 2023 அன்று சிபிஐயால் கைது செய்யப்பட்டாா். சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை மாா்ச் 9, 2023 அன்று சிசோடியாவை கைது செய்தது.
அவா் பிப்ரவரி 28, 2023 அன்று தில்லி அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தாா். தில்லியின் முன்னாள் துணை முதல்வா் சிசோடியா, 17 மாதங்களாக காவலில் உள்ளதாகவும், தனக்கு எதிரான விசாரணை இன்னும் தொடங்கவில்லை என்றும் கூறி ஜாமீன் கோரியிருந்தாா். அவரது ஜாமீன் மனுக்களை அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ எதிா்த்தன.