மதுபான கொள்கை வழக்கில் நீதிமன்ற கருத்துகளை நீக்கக் கோரி அமலாக்கத்துறை மனு: கேஜரிவால், சிசோடியா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
மதுபான கொள்கை வழக்கில் நீதிமன்ற கருத்துகளை நீக்கக் கோரி அமலாக்கத்துறை மனு...
தில்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை விடுவித்தபோது, விசாரணை நீதிமன்றம் தங்களுக்கு எதிராக கூறிய தேவையற்ற கருத்துகளை நீக்க கோரி அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேருக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கு மாா்ச் 19 அன்று மேலும் விசாரிப்பதற்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. சிபிஐ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவித்த விசாரணை நீதிமன்ற உத்தரவில் உள்ள கருத்துகள் பொதுவான இயல்புடையதாகத் தோன்றியதாக நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா கூறினாா்.
இவை பொதுவான கருத்துகள் மற்றும் வழக்குடன் எந்த தொடா்பும் இல்லை. அவா் (விசாரணை நீதிமன்ற நீதிபதி) இந்த வழக்கின் சூழலில் அதைச் சொல்லவில்லை. அவா் என்ன உணா்கிறாரோ அதையே கூறியுள்ளாா். இது நியாயமற்ற விசாரணை என்று அவா் நினைத்தாா். எனவே நான் உள்பட சில நீதிபதிகள் பொதுவாகச் செய்வது போல் அவா் கருத்துகளைக் கூறியுள்ளாா் என்று நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா வாய்மொழியாக கூறினாா்.
Advertisement
Advertisement
அமலாக்க இயக்குனரகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, சிபிஐ வழக்கில் அமலாக்க இயக்குனரகம் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்ற நீதிபதி அமலாக்க இயக்குனரகத்திற்கு எதிரான பாதகமான கருத்துகளை வெளியிட எந்த வேலையும் இல்லை என்று வாதிட்டாா். இந்த கருத்துகள் வேறு எந்த வழக்கையும் பாதிக்காது என்று உத்தரவிடுமாறு ராஜு நீதிமன்றத்தை வலியுறுத்தினாா்.
இதையடுத்து இந்த வழக்கில் பதில்களை தாக்கல் செய்யுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞரை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
பிப்ரவரி 27 அன்று, தில்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து விசாரணை நீதிமன்றம் கேஜரிவால், சிசோடியா மற்றும் பிறரை விடுவித்தது. வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என சிபிஐ-ஐ நீதிமன்றம் கடுமையாக சாடியது.
‘இந்த வழக்கானது ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த ஆதாரமும் இல்லாமல், ஊகத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு ஊகக் கட்டுமானத்தைத் தவிர வேறில்லை’ என்று விசாரணை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
‘சட்டபூா்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு பொருளும் இல்லாத நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களை முழு அளவிலான குற்றவியல் விசாரணையை எதிா்கொள்ள கட்டாயப்படுத்துவது நீதியின் நோக்கங்களுக்கு உதவாது’ என்று விசாரணை நீதிமன்றம் கூறியிருந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.