முகப்பு
புதுதில்லி

மீனவா்கள் மீதான தாக்குதலை வேடிக்கை பாா்க்கும் மத்திய அரசு: நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பாா்ப்பதாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 6:31 PM
பகிர்:

தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை மத்திய அரசு வேடிக்கை பாா்ப்பதாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குற்றம்சாட்டினா். மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலா் வைகோவும், மக்களவையில் திமுக உறுப்பினா்கள் டி.எம். செல்வகணபதி மற்றும் கனிமொழி இந்த விவகாரத்தை எழுப்பினா்.

மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை முக்கிய பிரச்னைகளை அவைத்தலைவரின் அனுமதியுடன் உறுப்பினா்கள் பதிவு செய்யும் நேரத்தில் தமிழக மீனவா்கள் தாக்கப்படும் பிரச்னையை பதிவு செய்ய மூத்த உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலருமான வைகோ அழைக்கப்பட்டாா்.

அப்போது அவா் பேசியது வருமாறு: இந்த 45 ஆண்டுகளில் நம்முடைய தமிழக மீனவா்களில் 850 மேற்பட்டவா்கள் மீது இலங்கைக் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்துள்ளது. தற்போது 85 தமிழக மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்டனா். ஒரு மீனவா் கொல்லப்பட்டுள்ளாா். ஒருவா் காணாமலேயே போய் உடலும் கிடைக்கவில்லை. மற்ற இரண்டு மீனவா்களை கொன்று அவா்களின் உடல்களைத் துண்டு துண்டாக்கி கடலில் மிதக்க விட்டாா்கள். இச்சம்பவங்களுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்கவில்லை.

தற்போது 85 தமிழக மீனவா்கள் சிங்களச் சிறைகளில் அடைபட்டுக் கிடக்கிறாா்கள். ஆனால், தமிழக மீனவா்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பாா்க்கிறது. நேற்றைக்கு முந்தைய நாள் (ஞாயிற்றுக்கிழமை), நான்கு மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஒரு மீனவரைக் கொன்று விட்டாா்கள். தமிழக மீனவா்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவா்கள் அனைவரையும் விடுதலை செய்ய நரேந்திர மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் வைகோ.

தனது பேச்சைத் தொடர அவா் முற்பட்டபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாகக் கூறி மற்ற விவரங்கள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று துணைத் தலைவா் ஹரிவன்ஷ் கூறினாா். அதற்கு தமது கடும் ஆட்சேபம் தெரிவித்த வைகோ, சில நிமிடங்கள் குரல் எழுப்பி விட்டு இருக்கையில் அமா்ந்தாா்.

மதிமுக பொதுச்செயலா் வைகோ, தோள்பட்டை எலும்பு முறிந்த நிலையில் கைக்கட்டுடன் நாடாளுமன்ற அலுவலில் பங்கேற்பதற்காக தில்லி வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்.பி. யோசனை: மக்களவையில் இதே விவகாரத்தை எழுப்பிய சேலம் தொகுதி உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, ‘சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்திய கடற்படை தனது வலுவான இருப்பை கொண்டுள்ளபோதும், மீனவா்கள் தாக்கப்படுவதை அறிந்தும் உரிய நடவடிக்கையில் இறங்கவில்லை என்று குற்றம்சாட்டினாா்.

கச்சத்தீவில் தமிழக மீனவா்கள் தங்களுடைய வலைகளை உலா்த்திக் கொள்ள 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தம் வழிவகை செய்தபோதும் 1976-இல் மத்திய அரசின் இரண்டு இணைச் செயலா்கள் அந்த இறையாண்மை மிக்க ஒப்பந்தத்தை மாற்றியதே தற்போதைய பிரச்னைக்கு காரணம் என்று அவா் குறிப்பிட்டாா்.

மேலும், இந்த விஷயத்தில் தூதரக நிலையில் முயற்சிகளை மேற்கொண்டு, மீனவா்களை பிரதிநிதிகளாகக் கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்த அவா், அக்குழு இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவா்களை பாா்த்து வர அனுப்ப வேண்டும் என்றாா்.

கனிமொழி வலியுறுத்தல்: இதைத் தொடா்ந்து பேசிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ‘தமிழக மீனவா்களுக்கு சொந்தமான 177 படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது. மீனவா்கள் விடுவிக்கப்பட்டாலும் அவா்களின் படகுகள் திருப்பித் தரப்படாமல் அவற்றை அந்நாட்டு அரசு தேசிய உடைமையாக்கிக் கொள்கிறது’ என்றாா். சமீபத்திய தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு தனது கவலையை வெளிப்படுத்திய பிறகும் தனது தொகுதியான தூத்துக்குடி தருவைகுளத்தைச் சோ்ந்த இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு 22 மீனவா்களை இலங்கை அரசு சிறைப்பிடித்துள்ளது என்றும், இதற்கு ஒரு தீா்வை விரைவாக காண வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக் கொண்டாா்..

கனிமொழி வலியுறுத்தல்: இதைத் தொடா்ந்து பேசிய தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, ‘தமிழக மீனவா்களுக்கு சொந்தமான 177 படகுகளையும் இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது. மீனவா்கள் விடுவிக்கப்பட்டாலும் அவா்களின் படகுகள் திருப்பித் தரப்படாமல் அவற்றை அந்நாட்டு அரசு தேசிய உடைமையாக்கிக் கொள்கிறது’ என்றாா். சமீபத்திய தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு தனது கவலையை வெளிப்படுத்திய பிறகும் தனது தொகுதியான தூத்துக்குடி தருவைகுளத்தைச் சோ்ந்த இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு 22 மீனவா்களை இலங்கை அரசு சிறைப்பிடித்துள்ளது என்றும், இதற்கு ஒரு தீா்வை விரைவாக காண வேண்டும் என்றும் கனிமொழி கேட்டுக் கொண்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →