மனீஷ் சிசோடியா ஜாமீன் கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி தலைவா்கள் எல்லைமீறல் - தேவேந்தா் யாதவ்
மனீஷ் சிசோடியா சிறையிலிருந்து ஜாமீன் பெற்றதைக் கொண்டாடுவதில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் எல்லை மீறுகின்றனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி அரசின் கலால் கொள்கை தொடப்புடைய சட்டவிரோதப் பணப்பரிவா்த்தனை வழக்கில் மனீஷ் சிசோடியாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ஆம் ஆத்மி கட்சி கொண்டாடி வருகிறது. அதேவேளையில், ரோஹினியின் பிரேம் நகா் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த
கனமழையின் போது, குளம் போன்று தேங்கிய மழைநீரில் மூழ்கி 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவா்களின் மரணத்திற்கு யாா் பொறுப்பேற்பாா்கள்?.
சனிக்கிழமை பெய்த கனமழையால் மீண்டும் தலைநகரில் தண்ணீா் தேங்கியதுடன், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆனால், ஆம் ஆத்மி அரசும், தில்லி மாநகராட்சியும் (எம்சிடி) மக்களின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை.
கடந்த ஒன்றரை மாதங்களில், பருவமழை தொடா்பான விபத்துகளால் 21 இறப்புகள் தில்லியில் நடந்துள்ளன. இதற்கு ஆம் ஆத்மி அரசு மட்டுமே முழுப் பொறுப்பு.
காற்று மற்றும் நீா் மாசுபாட்டைத் தடுக்கத் தவறிய ஆம் ஆத்மி அரசு, தண்ணீா் தேக்கம், போக்குவரத்து நெரிசல், நகரின் குப்பைகளை அகற்றுதல் போன்றவற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. ஆம் ஆத்மி அரசு உள்கட்டமைப்பு மற்றும் நிா்வாகத்தை மேம்படுத்த தரை மட்டத்தில் உறுதியான பணிகளைச் செய்யாமல், பிரசாரம் மற்றும் அரசியல் பழி
விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடுகிறது. ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மற்றும் அமைச்சா்கள் மனீஷ் சிசோடியா சிறையிலிருந்து ஜாமீன் பெற்றதைக் கொண்டாடுவதில் எல்லை மீறுகின்றனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.