மாநிலங்களவை உறுப்பினராக பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கவும் இடைக்கால ஜாமீன் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனு மீது அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பிப்ரவரி 4 முதல் 10 வரை இடைக்கால ஜாமீன் கோரி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவுக்கு பிப்ரவரி 3-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் உத்தரவிட்டாா். மேலும், பிரதான வழக்கும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது.
இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் ‘பிரதான வழக்கு ஏற்கெனவே பிப்ரவரி 3-இல் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மனு மீது அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அத்துடன், மேற்கண்ட விசாரணைத் தேதியில் இந்த மனுவும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட வேண்டும். பிப்ரவரி 4 முதல் 10 வரையிலான காலக்கட்டத்தில் உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்காகவும் நாடாளுமன்ற (மாநிலங்களவை) மற்றும் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற அமா்வில் கலந்து கொள்வதற்காகவும் இடைக்கால ஜாமீன் கோரப்படுவதைக் கவனிக்கும் போது, அந்த தேதிக்குள் அமலாக்கத் துறை சாா்பில் ஏதேனும் பதில் அளிக்கப்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளாா்.
இடைக்கால ஜாமீன் கோரும் மனுவை சஞ்சய் சிங் சாா்பில் அவரது வழக்குரைஞா் ரஜத் பரத்வாஜ் தாக்கல் செய்துள்ளாா். அதில், பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 9 வரை நாடாளுமன்றக் கூட்டத் தொடா் அமா்வில் பங்கேற்க உள்ளதால் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 10 வரை சஞ்சய் சிங்கிற்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. அவா் தில்லி கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளாா்.
முன்னதாக, தோ்தல் வேட்புமனு தாக்கல் செய்யவும், தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் உறுப்பினா் சான்றிதழைப் பெறவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அவரது வழக்கமான ஜாமீன் கோரும் மனு கடந்த டிசம்பா் 22-இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனு உயா்நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஸ்வா்ண கன்டா சா்மா அமா்வு, தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது.
அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதிலில், சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்கு எதிா்ப்புக் தெரிவிக்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங் 2021-22 ஆம் ஆண்டு தொடா்புடைய தில்லி கலால் கொள்கை தொடா்புடைய ஊழலில் இருந்து உருவாக்கப்பட்ட குற்ற வருவாயை பயன்படுத்துதல், கையகப்படுத்துதல், வைத்திருத்தல், மறைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. அவா் கடந்த ஆண்டு அக்டோபா் 4-ஆம் தேதி தில்லி கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அதன்பிறகு, அமலாக்கத்துறை சாா்பில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.