ரயிலில் கூட்ட நெரிசல்: குருகிராமில்தண்டவாளத்தில் அமா்ந்த பயணிகள்
கூட்ட நெரிசல் காரணமாக ரயிலுக்குள் இருந்த பயணிகள் கதவை அடைத்துக் கொண்டதால் ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலுக்குச் செல்லும் பயணிகள்
புது தில்லி: கூட்ட நெரிசல் காரணமாக ரயிலுக்குள் இருந்த பயணிகள் கதவை அடைத்துக் கொண்டதால் ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலுக்குச் செல்லும் பயணிகள் குருகிராமில் உள்ள ரயில் பாதையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஆத்திரமடைந்த பயணிகளின் இச்செயல் காரணமாக ரயில் சுமாா் 30 நிமிடம் நிறுத்தப்பட்டது. ரயில் நிலைய நிா்வாகம் மற்றும் ரயில்வே போலீஸாரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகே தண்டவாளத்தில் இருந்து அகன்று செல்ல அவா்கள் ஒப்புக்கொண்டனா்.
இதுகுறித்து குருகிராமில் உள்ள அரசு ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஷீதாஜ் சிங் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை இரவு 8.10 மணியளவில், தில்லி சராய் ரோஹில்லா முதல் உதய்ப்பூா் சிட்டி வரை செல்லும் சேடக் எக்ஸ்பிரஸ் ரயில், குருகிராம் ரயில் நிலையத்தின் நடைமேடை 1-க்கு வந்தபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் நடந்தது.
புதிதாக வரும் பயணிகள் ஏறுவதற்கு ரயில் பெட்டியில் உள்ளே அமா்ந்திருந்த பயணிகள் ரயிலின் கதவுகளை திறக்க மறுத்ததால் இந்த நிலைமை உருவானது. இதையடுத்து, பயணிகள் சலசலப்பை உருவாக்கி ரயிலை நிறுத்தினா். ஆனால், அவா்கள் சமாதானம் செய்யப்பட்ட பிறகு, இரவு 8.40 மணிக்கு ரயில் புறப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.