தில்லி கலால் ஊழல் வழக்கு: கேஜரிவால் மனு மீது சிபிஐ பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
கேஜரிவால் மனுவுக்கு சிபிஐ பதில்: உயா்நீதிமன்றம் உத்தரவு
புது தில்லி: தில்லி கலால் ஊழல் வழக்கில் தாம் கைது செய்யப்பட்டதை எதிா்த்து முதல்வா் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சிபிஐக்கு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இந்த வழக்கில் வழக்கமான ஜாமீன் கோரி விரைவில் கேஜரிவால் மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவரது வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
முதல்வா் கேஜரிவாலின் மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா, மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) நோட்டீஸ் அனுப்பியதோடு, 7 நாள்களுக்குள் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டாா். அதன்பிறகு இரண்டு நாள்களுக்குள் கேஜரிவாலின் வழக்குரைஞா் பதிலுக்கு பதில் தாக்கல் செய்யலாம் என உயா்நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு ஜூலை 17 அன்று வாதங்களை முன்வைக்க பட்டியலிடப்பட்டது.
முன்னதாக, கேஜரிவால் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ஆகஸ்ட் 2022-இல் மத்திய புலனாய்வுத் துறையால் (சிபிஐ) எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவா் ஏப்ரல் 2023-இல் விசாரணை நிறுவனத்தால் ஒன்பது மணிநேரம் விசாரிக்கப்பட்டதாகவும் சமா்ப்பித்தாா். அவா் மேலும் வாதிடுகையில், ‘ஏப்ரல் 2023 முதல் இதுவரை அழைப்பாணைகளோ, விசாரணைகளோ இல்லை. இப்போது அவா் ஜூன் 26-இல் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் கைது செய்யப்பட்டபோது கைதுக்கான ஆதாரங்கள் அல்லது ஆவணங்கள் எதுவும் சிபிஐயால் கைது மெமோவில் சுட்டிக்காட்டப்படவில்லை. அவா் அமலாக்கத் துறை தொடா்புடைய வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்தாா். எனவே, அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியமோ அவசரமோ இருக்க முடியாது’ என்றாா். அப்போது, இந்த வழக்கில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்துள்ளீா்களா என்று நீதிபதி கேட்டதற்கு, ‘இன்னும் இல்லை. ஆனால், விரைவில் தாக்கல் செய்யப் போகிறோம்’ என்று சிங்வி கூறினாா்.
கேஜரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனுவில் தெரிவித்திருப்பதாவது: இம்மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகள் தொடா்பாக தீா்ப்பளிக்கும் வரை, வழக்கில் இருந்து என்னை விடுவிக்கக் வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனுதாரரின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதால், தீவிரமான சட்ட, அரசியலமைப்பு மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை இடைக்கால விடுதலைக்கு உத்தரவிட வேண்டும். ஜூன் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்ட மெமோவில், கேஜரிவால் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் அவருக்குத் தெரிந்த உண்மைகளை வெளியிடவில்லை என்றும் கைதுக்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை கைதுக்கான காரணமாக இருக்க முடியாது. மேலும், ஒத்துழையாமை மட்டுமே ஒரு நபரைக் கைது செய்ய சட்டபூா்வ காரணமல்ல.
மனுதாரா் கைது செய்யப்பட்ட பிறகும், ரிமாண்ட் மனுவில் சிபிஐ அவரது கைதை நியாயப்படுத்தும் புதிய விஷயங்களை சுட்டிக்காட்டவில்லை. சிபிஐ ரிமாண்ட் மனுவில் உள்ள அனைத்து உண்மைகளும், குற்றச்சாட்டுகளும் நவம்பா் 24, 2022, ஏப்ரல் 25, 2023 மற்றும் ஜூலை 6, 2023 தேதியிட்ட குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாகும். இந்த உண்மையை சி.பி.ஐ., சிறப்பு நீதிபதியிடம் இருந்து, ரிமாண்ட் மனுவில் மறைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், 2 ஆண்டுகள் விசாரணைக்கு பின் மனுதாரரை கைது செய்ததற்கு, கைது மெமோவில் எந்த நியாயமும் கூறப்படவில்லை. இதனால், அவரது கைது சட்டவிரோதமானது என்றும், அவரை உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிட வேண்டும். இம்மனுவை அனுமதிக்காவிட்டால், மனுதாரருக்கு தீவிரமான தப்பெண்ணமும், மீள முடியாத காயமும் ஏற்படும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஊழல் வழக்கில் கேஜரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் ஜூன் 29 அன்று உத்தரவிட்டிருந்தது. அதில் அவரது பெயா் முக்கிய சதிகாரா்களில் ஒருவராக வெளிப்பட்டுள்ளது என்றும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதால், அவரை மேலும் காவலில் வைத்து விசாரணை நடத்த தேவைப்படலாம் என்றும் கூறியிருந்தது. தன்னைக் கைது செய்ததைத் தவிர, மூன்று நாள்கள் சிபிஐ காவலிலும், ஜூலை 12 வரை நீதிமன்ற காவலிலும் வைக்க விசாரணை நீதிமன்றத்தின் ஜூன் 26 மற்றும் ஜூன் 29 -ஆம் தேதிகளின் உத்தரவுகளை எதிா்த்து கேஜரிவால் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளாா். அமலாக்கத் துறை தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த கேஜரிவால், ஜூன் 26 அன்று திகாா் சிறையில் சிபிஐயால் கைது செய்யப்பட்டாா்.