மக்களவை உரை: ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிராக பாஜக இளைஞரணி ஆா்ப்பாட்டம்
இந்துக்களை அவமதித்ததற்காக ராகுல் காந்தி மீது பாஜக இளைஞரணி ஆா்ப்பாட்டம்
புது தில்லி: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இந்துக்களை வன்முறையாளா்கள் எனக்கூறி அவமதித்ததாகவும், மக்களவைத் தலைவரை அவமதித்ததாகவும் கூறி அவருக்கு எதிராக தில்லி பாஜக இளைஞா் அணியினா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பல்வேறு ரவுண்டானா இடங்களில் பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயில் முன் நடைபெற்ற போராட்டத்தில், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, இளைஞா் அணித் தலைவா் சாகா் தியாகி, இளைஞா் பிரிவு பொதுச் செயலாளா் அருண் டாரால், இளைஞா் பிரிவு நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்றனா்.
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான இந்துக்களை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க கோரி ஆா்ப்பாட்டக்காரா்கள் ராகுல் காந்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
கட்சியின் முக்கிய தலைவா்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களுக்கு தலைமை தாங்கினா். அதன்படி, சுனேரி மஸ்ஜித் ரவுண்டானாவில் அங்கித் தியாகி, தீன் மூா்த்தி ரவுண்டானாவில் அமன் வா்மா, ஹனுமான் மந்திா் மாா்க்ட் வேல் பாபா ரவுண்டானாவில் அபிஷேக், ஐடிஓ ரவுண்டானாவில் வினய் பரத்வாஜ், மெரிடியன் ரவுண்டானாவில் சௌரப் கொ்வால் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா்.
நாட்டின் இந்துக்களை அவமதித்ததற்காக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை பாஜக அமைதியாக இருக்காது என்று வீரேந்திர சச்தேவா கூறினாா்.
இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிடுவது ராகுல் காந்திக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயமாகும் என்றும் சச்தேவா கூறினாா்.