கலால் ‘ஊழல்’: கேஜரிவாலின் ஜாமீன் மனுவை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் சம்மதம்
அரவிந்த் கேஜரிவாலின் ஜாமீன் மனுவை விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் ஒப்புதல்
கலால் கொள்கை ஊழல் தொடா்பாக சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் ஜாமீன் கோரி தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை ஜூலை 5ஆம் தேதி விசாரிப்பதாக தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று பொறுப்புத் தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கேஜரிவாலின் வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா்.
கேஜரிவால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரஜத் பரத்வாஜ், சட்ட விதிகளை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மனுதாரா் கேஜரிவால் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவா் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிபதிகள் அமா்விடம் கூறினாா்.
மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு பட்டியலிட வழக்குரைஞா் வற்புறுத்தியதால், நீதிபதி மன்மோகன், ’கற்றறிந்த நீதிபதி ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அடுத்த நாள் நாங்கள் பட்டியலிடுவோம்’ என்றாா்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் ஜூன் 26 ஆம் தேதி திகாா் சிறையில் இருந்தவாறு சிபிஐயால் கைது செய்யப்பட்டாா். அங்கு அவா் அமலாக்கத் துறை)தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் இன்னும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
இதற்கிடையில், விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தனது வழக்குரைஞா்களுடன் ஒவ்வொரு வாரமும் இரண்டு கூடுதல் சந்திப்புகளை அனுமதிப்பதற்காக சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரும் தனது மனுவை நிராகரித்த விசாரணை நீதிமன்றத்தின் ஜூலை 1-ஆம் தேதியிட்ட உத்தரவுக்கு எதிராகவும் கேஜரிவால் முறையிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது ஒரு வாரத்தில் தனது வழக்குரைஞா்களுடன் இரண்டு சந்திப்புகளை மேற்கொள்ள அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
அவா் ஏற்கனவே சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளது.
ஜூலை 17-ஆம் தேதி வாதத்திற்குப் பட்டியலிடப்பட்ட நிலையில், பதில் அளிக்குமாறு சிபிஐக்கு உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த மாா்ச் 21ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட கேஜரிவாலுக்கு, பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜூன் 20 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்தது.
தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதையடுத்து, 2022-இல் தில்லி கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது.
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கலால் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் மற்றும் உரிமதாரா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன.