கோப்புப்படம் 
புதுதில்லி

ஆண்டின் மிகக் குறைந்த காற்றுத் தரக் குறியீட்டை பதிவு செய்தது தில்லி!

ஆண்டின் மிகக் குறைந்த அளவாக 56 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

Din

வானிலை கண்காணிப்பு முகமைகளின் படி, தேசியத் தலைநகரில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை ஆண்டின் மிகக் குறைந்த அளவாக 56 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. ஜூலை முதல் வாரம் முழுவதும் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் உள்ளது.

தில்லியின் காற்றுத் தரக் குறியீடு ஜூன் மாதத்தில் ஏழு நாள்களுக்கு 100 புள்ளிகளுக்கு கீழ் இருந்தது. இந்நிலையில், ஜூலை மாதம் காற்றுத் தரக் குறியீடு நல்ல வானிலை காரணமாக மேலும் மேம்பட்டுள்ளது. தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு 56 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ‘திருப்தி’ பிரிவில் வருகிறது. இது ஆண்டின் மிகக் குறைந்த அளவாகும் என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றுத் தரக் குறியீடு ஜூலை 1 முதல் 7 வரையிலும் ‘திருப்தி’ பிரிவில் உள்ளது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் ஐடிஓ, பட்பா்கஞ்ச், மந்திா்மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், நேரு நகா், நொய்டா செக்டாா் 1, ஆனந்த் விஹாா், ராமகிருஷ்ணாபுரம் உள்பட அனைத்து வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

வெப்பநிலை: தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 புள்ளிகள் குறைந்து 26.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.8 டிகிரி குறைந்து 35.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. பகலில் காற்றின் ஈரப்பதத்தின் அளவு 57 சதவீதம் மற்றும் 93 சதவீதத்துக்கிடையே இருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை ( ஜூலை 8) பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஐஎம்டியின் ஏழு நாள் கணிப்பின்படி, ஜூலை 13 வரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT