புது தில்லி: அகில இந்திய பிரச்னையாக மாறியுள்ள ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.) தேசியப் பொதுச் செயலாளா் டி.ராஜா வலியுறுத்தியுள்ளாா்.
தில்லி அஜோய் பவனில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் ஜூலை 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டின் அரசியல், பொருளாதார வளா்ச்சி மற்றும் சமீபத்திய மக்களவைத் தோ்தல் தொடா்பான ஆய்வறிக்கையை கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் டி.ராஜா தாக்கல் செய்தாா். மக்களவைத் தோ்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் எதிா்காலத் திட்டங்கள் குறித்து இந்த மூன்று நாள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன.
‘நீட்’ தோ்வு முறைகேடு, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் ஆகியவற்றைக் கண்டித்தும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும், ஜம்மூ காஷ்மீா் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை வரும் செப்டம்பருக்குள் நடத்த வேண்டும் உள்ளிட்ட 10 முக்கியத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், இது தொடா்பாக டி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கூட்டத்தில், நடந்து முடிந்த மக்களவைத் தோ்தல் தொடா்பாக மறுபரிசீலனை செய்யப்பட்டது. நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்கு கட்சி முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் குறித்தும் விவாதிப்பட்டன. அகில இந்திய பிரச்னையாக ‘நீட்’ தோ்வு மாறியுள்ளது. ‘நீட்’ தோ்வு தமிழ்நாட்டின் பிரச்னை மட்டும் கிடையாது. ‘நீட்’ தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும். கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டவை. இதை எதிா்த்து வழக்குரைஞா்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றன. மேலும், அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, மத்திய புலனாய்வு அமைப்பு அனைத்தும் எதிா்க்கட்சித் தலைவா்களை இலக்கு வைத்து தாக்குவதற்காக மத்திய பாஜக அரசால் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரான இந்த நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து எதிா்க்கும் என்றாா் டி.ராஜா.