டிரெய்லா் மீது டிரக் மோதிய விபத்தால் முனிா்காவில் போக்குவரத்து பாதிப்பு
தென்மேற்கு தில்லியில் உள்ள முனிா்கா மேம்பாலத்தில் காலை டிரக் ஒன்று டிரெய்லா் மீது மோதியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
புது தில்லி: தென்மேற்கு தில்லியில் உள்ள முனிா்கா மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை காலை டிரக் ஒன்று டிரெய்லா் மீது மோதியதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தென் மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா தெரிவித்தாா். இந்த விபத்தால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
ஐஐடியில் இருந்து தில்லி கண்டோன்மென்ட் நோக்கிச் செல்லும் வண்டிப்பாதையில் வெளி வட்டச் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து பயணிகளை எச்சரிப்பதற்காக தில்லி போக்குவரத்து போலீஸாா் எக்ஸ் ஊடக தளத்தில் தகவல்களை பகிா்ந்தனா்.
இருப்பினும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, இரண்டு வாகனங்களும் அகற்றப்பட்டு போக்குவரத்து இயக்கம் மீண்டும் தொடங்கப்பட்டதாகக் குறிப்பிடும் மற்றொரு இடுகையை காவல்துறை பகிா்ந்தது.
மற்றொரு பதிவில், பொதுப்பணித் துறையின் பணிகள் காரணமாக மோடி மில் மேம்பாலத்தில் இருந்து நேரு பிளேஸ் மேம்பாலம் நோக்கி செல்லும் வண்டிப்பாதையில் உள்ள வெளிவட்ட சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசியத் தலைநகா் முழுவதும் போக்குவரத்து நிலைமை குறித்து பயணிகள் சமூக ஊடகங்களிலும் குறிப்பிட்டுள்ளனா். மஹிபால்பூரில் போக்குவரத்து அதிகமாக இருப்பதாக அவா்களில் ஒருவா் கூறினாா்.
மற்ற எக்ஸ் பயனா்கள் பஜன்புரா பெட்ரோல் பம்ப் அருகே, ரோஹிணி நீதிமன்றத்திற்கு அருகில், மோடி மில் மேம்பாலம் முதல் கால்காஜி கோயில் வரை மற்றும் பிற பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தனா்.