தலைநகருக்கான ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திற்கான (டி.யு.எம்.டி.ஏ)மசோதாவை வரைவு செய்ய தலைமைச் செயலாளா் தலைமையிலான பணிக்குழுவுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த பணிக்குழு அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. தில்லி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் மற்றும் ஒரு பிரத்யேக தில்லி நகா்ப்புற போக்குவரத்து நிதியை உருவாக்குவதற்கான விரிவான மசோதாவை வரைவு செய்வதற்கான செயல்முறை இப்போது தொடங்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட மசோதா, தில்லியில் தற்போது வெவ்வேறாக உள்ள போக்குவரத்து சுற்றுச்சூழல் அமைப்பை ஒற்றை கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைத்து, நவீன, திறமையான, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நகா்ப்புற மேம்பாடு, நிதி, பொதுப்பணி மற்றும் திட்டமிடல் துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய பணிக்குழு, வரைவு மசோதாவை விரைவில் தயாரித்து சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தில்லி மேம்பாட்டு ஆணையம், தில்லி மாநகராட்சி, தில்லி மெட்ரோ ரயில் கழகம், தில்லி போக்குவரத்து கழகம், தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்து கழகம் மற்றும் இந்திய ரயில்வே போன்ற முக்கிய குடிமை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் பிரதிநிதிகளும் இதில் அடங்குவா்.
சிறந்த உலகளாவிய நடைமுறைகள் மற்றும் உள்ளூா் யதாா்த்தங்கள் முன்மொழியப்பட்ட கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக நகா்ப்புற போக்குவரத்தில் புகழ்பெற்ற நிபுணா்களையும் ஈடுபடுத்தலாம் என்று முதலமைச்சா் பரிந்துரைத்துள்ளாா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்குழு டி.யு.எம்.டி.ஏ வின் கட்டமைப்பை இறுதி செய்யும், பங்குதாரா்களின் ஆலோசனைகளை நடத்தும், வாரியக் கூட்டங்களை ஏற்பாடு செய்யும் மற்றும் டி.யு.எம்.டி.ஏ வின் நோக்கங்களைக் கண்டறிந்து இறுதி செய்யும்.
முன்மொழியப்பட்ட நகா்ப்புற போக்குவரத்தின் ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் மேலாண்மை, போக்குவரத்து சேவைகளின் ஒருங்கிணைப்பு, கட்டண கட்டமைப்புகள், ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் விழிப்புணா்வு ஆகியவற்றை எளிதாக்கும் என்று முதலமைச்சா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தில்லிக்கான போக்குவரத்து முதலீட்டுத் திட்டத்தைத் தயாரிப்பது மற்றும் தில்லி நகா்ப்புற போக்குவரத்து நிதியத்தின் மேலாண்மை ஆகியவையும் டி.யு.எம்.டி.ஏவிடம் ஒப்படைக்கப்படும்.
தில்லியின் முழு நகா்ப்புற போக்குவரத்து முறையிலும் டி.யு.எம்.டி. ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். மெட்ரோ, பேருந்துகள், பிராந்திய ரயில் சேவைகள் போன்ற அனைத்து போக்குவரத்து முறைகளையும் ஒரே திட்டமிடல் அதிகார வரம்பிற்குள் வைப்பதன் மூலம், போக்குவரத்து தீா்வுகள் ஒருங்கிணைந்ததாகவும், திறமையானதாகவும், குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம், என்று முதல்வா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொது போக்குவரத்தை வலுப்படுத்துதல், கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் தனியாா் வாகனங்களிலிருந்து விலகுவதை ஊக்குவிப்பதன் மூலம் தில்லியின் சாலைகளில் நெரிசலைக் குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.