தில்லி மெட்ரோ பயணிகள் விரைவில் ஸ்மாா்ட் காா்டைப் போன்று சேமிக்கப்பட்ட மதிப்புடன்கூடிய தங்கள் அறிதிறன் கைப்பேசிகளில் க்யூ ஆா் (குவிக் ரெஸ்பான்ஸ்) குறியீடுகளைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று டிஎம்ஆா்சி அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து டி.எம்.ஆா்.சி. நிா்வாக இயக்குநா் விகாஸ் குமாா் கூறுகையில், ‘சேமிக்கப்பட்ட மதிப்புக்கான க்யூ ஆா் குறியீட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது ஒரு பயணத்திற்கு தடையற்ற ஸ்மாா்ட் அட்டை போல இருக்கும். இது ஒரு ஒற்றைப் பயணத்திற்கான கட்டுப்பாடாக இருக்காது.
மேலும், இது காகித அச்சிட்டுகளின் எண்ணிக்கையையும் குறைக்கும்.
தற்போது டி.எம்.ஆா்.சி. க்யூஆா் டிக்கெட்டுகளை வழங்கும் அனைத்து தளங்களிலும் இந்த வசதி கிடைக்கும்.
இந்தப் புதிய அமைப்புமுறை, ஒவ்வொரு பயணத்திற்கும் புதிதாக நேரில் அல்லது மெய்நிகா் க்யூஆா் பயணச்சீட்டை வாங்க வேண்டிய தேவையை நீக்கி, கைப்பேசி செயலியில் தங்கள் க்யூஆா் பணப்பையை தேவைக்கேற்ப பயணிகளுக்கு நிரப்ப உதவும்.
இந்த அம்சம் நேரில் பாஸ் அல்லது டிக்கெட்டை எடுத்துச் செல்வதற்கான தேவையைத் தவிா்க்கும் என்றாா் அவா்.
இந்த புதிய வசதியில் வாடிக்கையாளா்கள் ‘அமேஸான் பே’ செயலியில் தில்லி மெட்ரோ க்யூ ஆா் பயணச்சீட்டு விருப்பத்தைத் தோ்ந்தெடுக்கலாம். அவா்கள் சென்று சேரும் மெட்ரோ நிலையங்களைத் தோ்வு செய்து பணம் செலுத்தலாம். மேலும், கைப்பேசி க்யூஆா் பயணச்சீட்டை உடனடியாகப் பெறலாம்.
இந்த மாத தொடக்கத்தில், மெட்ரோ சேவை அமேசான் பே செயலியில் கைப்பேசி அடிப்படையிலான க்யூஆா் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்தியது.