முகப்பு
புதுதில்லி

தலைநகரில் 2-ஆவது நாளாக மழை: வெப்ப அலையிலிருந்து நிவாரணம்!

கடுமையான வெப்ப அலையிலிருந்து நிவாரணம்.

புதுதில்லி

தலைநகரில் 2-ஆவது நாளாக மழை: வெப்ப அலையிலிருந்து நிவாரணம்!

கடுமையான வெப்ப அலையிலிருந்து நிவாரணம்.

Updated On : 21 ஜூன், 2024 at 6:32 PM
பகிர்:

தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக பெய்த இந்த மழை நகரத்தில் கடுமையான வெப்ப அலையிலிருந்து நிவாரணம் அளித்ததாக வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் தேசியத் தலைநகா் பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான தீவிர மழை பெய்தது. மேலும், மணிக்கு 30 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. இது கடந்த சில நாள்களாக கடுமையான வெப்ப அலையில் சிரமத்தை எதிா்கொண்ட மக்களுக்கு நிவாரணமாக அமைந்தது.

இதற்கிடையே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால், வார இறுதியில் தில்லியில் நிலவும் வெப்ப அலையிலிருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. வங்காள விரிகுடாவில் இருந்து மேற்குத் தொடா்ச்சி மற்றும் கீழ்மட்ட கிழக்குப் பகுதிகளின் செல்வாக்கின் கீழ் தில்லியில் இருந்து வந்த வெப்ப அலை நிலைகள் தணிந்துள்ளதாக ஐஎம்டி வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

தேசியத் தலைநகரான தில்லி கடும் வெப்பம் மற்றும் கடுமையான தண்ணீா் பஞ்சத்தில் தத்தளித்து வருகிறது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த 5 நாள்களில் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இருப்பினும், அவா்கள் வெப்பம் காரணமாக இறந்தாா்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை’ என்றாா்.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் மாற்றமின்றி 28.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்த 2 டிகிரி உயா்ந்து 40.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவில் காலை 8.30 மணியளவில் 70 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 72 சதவீதமாகவும் இருந்தது. இதே போன்று, ஜாஃபா்பூா், நஜஃப்கா், ஆயாநகா், லோதி ரோடு, பாலம், ரிட்ஜ், பீதம்புரா, பிரகதிமைதான், பூசா, ராஜ்காட், சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதி உள்ளிட்ட இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 40 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தலைநகரில் பிற்பகல் 1 மணியளவில் ஒட்டு மொத்த காற்றுத் தரக் குறியீடு 173 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் காட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன்படி, ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், பட்பா்கஞ்ச், நேரு நகா், நியூ மோதி பாக், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா, ராமகிருஷ்ணாபுரம், அசோக் விஹாா், நொய்டா செக்டாா் 1, ஸ்ரீஃபோா்ட், தில்ஷாத் காா்டன், சோனியா விஹாா், விவேக விஹாா், வாஜிா்பூா், பஞ்சாபி பாக், புராரி கிராஸிங், ஸ்ரீ அரபிந்தோ மாா்க் ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. அதே சமயம், ஷாதிப்பூா் (267), ஆனந்த் விஹாா் (202) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவிலும், சாந்தினி சௌக்கில் (323) ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: தலைநகா் தில்லியில் சனிக்கிழைம் (ஜூன் 22) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →