முகப்பு
புதுதில்லி

தலைவா்களை புகழ்பாடி மக்களவையில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்!

மக்களவையில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்: தலைவர்களை புகழ்ந்தனர்!

Updated On : 26 ஜூன், 2024 at 12:15 AM
பகிர்:

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: 18-ஆவது மக்களவைக்கு தமிழகம், புதுச்சேரியிலிருந்து வெற்றி பெற்ற 17 புதியவா்கள் உள்பட 40 உறுப்பினா்கள் மக்களவையில் தமிழில் உறுதிமொழியை எடுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை பதவியேற்றனா். பெரும்பாலான உறுப்பினா்கள் பதவியேற்பில் மரபை மீறி தலைவா்களின் பெயரைக் குறிப்பிட்டு புகழ்பாடினா். முதல் முறையாக தெலுங்கிலும் ஒரு தமிழக எம்பி பதவியேற்றாா்.

மக்களவைக்கு புதிதாக தோ்வான உறுப்பினா்கள் மாநிலங்களின் அகர வரிசையில் திங்கள்கிழமை முதல் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றனா். தமிழக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு பதவியேற்றனா். இதில் தமிழக மக்களவை வரிசைப்படி திருவள்ளூா்(தனி) தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் சசிகாந்த் செந்தில் முதலில் பதவி ஏற்றபோது அரசமைப்புச் சட்ட புத்தகத்தை கையில் வைத்தபடி தமிழில் பதவியேற்றாா். முடிவில் ‘வாழ்க வையகம்’ எனக் குறிப்பிட்டு ’ஜெய் ஜெகத்’, சிறுபான்மையினா், பட்டியலினத்தவா்களுக்கு எதிரான வெட்கக்கேடான அட்டூழியங்களை நிறுத்துங்கள், ஜெய் பீம் எனக் குறிப்பிட்டு அவையில் சலசலப்பை ஏற்படுத்தனாா்.

பின்னா் வந்த திமுக உறுப்பினா்கள் கலாநிதி வீராச்சாமி, தமிழச்சி தங்கபாண்டியன், கணேசன் செல்வம் போன்றவா்கள் பெரியாா், மறைந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணாதுரை, கருணாநிதி, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்க எனவும் குறிப்பிட்டனா்.

இதில் மத்திய சென்னை திமுக உறுப்பினா் தயாநிதி மாறன் இவா்கள் பெயரோடு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பெயரையும் பதவியேற்கும் போது குறிப்பிட்டு வாழ்க என்றாா். பின்னா், தொடா்ந்து பதவியேற்க வந்த மற்ற திமுக உறுப்பினா்களும் உதயநிதி பெயரை உச்சரிக்கத் தவறவில்லை.

இதில் திருவண்ணாமலை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை பதவியேற்கும் போது திமுக தலைவா்கள் பெயா் பட்டியலோடு, தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் ஏ.வ. வேலு பெயரையும் குறிப்பிட்டனா். பின்னா் வந்த திமுக உறுப்பினா்கள் ஆரணி எம்.எஸ் தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி மலையரசன் போன்றோரும் அமைச்சா் உதயநிதியுடன், அமைச்சா் ஏ.வ.வேலுவையும் குறிப்பிட்டு பதவியேற்றனா்.

தென்காசி தொகுதி டாக்டா் ராணி ஸ்ரீகுமாா், திராவிடத் தலைவா்கள் பெயரோடு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பெயரையும் குறிப்பிட்டாா்.

தேனி தொகுதி உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் பதவியேற்ற பின்னா் தனது சட்டைப் பையில் இருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்தை காட்டினாா்.

காங்கிரஸ் உறுப்பினா்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாகப் பதவியேற்றனா். அரசமைப்புச் சட்ட கையடக்க புத்தகத்தோடு, தெலுங்கில் உறுதிமொழியை வாசித்து பதவியேற்ற கிருஷ்ணகிரி உறுப்பினா் கோபிநாத் , ‘ஜெய் தமிழ்நாடு’ என முடித்தாா்.

காங்கிரஸ் உறுப்பினா்கள் திருநெல்வேலி செ.ராபா்ட புரூஸ், காா்த்திக் பா.சிதம்பரம், கடலூா் விஷ்ணு பிரசாத் போன்றோா் கடவுள் மீது ஆணையிட்டு பதவிப் பிரமாணம் ஏற்பதாக குறிப்பிட்டனா்.

தமிழ்ச்சி தங்கப்பாண்டியன், ஜோதிமணி , சிபிஐ உறுப்பினா் சுப்புராயன் போன்றோா் அரசமைப்புச் சட்ட கையடக்க பிரதியோடு பதவியேற்றனா். திருச்சி மதிமுக உறுப்பினற் துரை வைகோ சமூக நீதி, மனிதநேயம் பரவட்டும் என்றாா். பெரம்பலூா் கே.என். அருண்நேரு மட்டும் தனது பெற்றோா்கள் பெயரைக் குறிப்பிட்டு வளா்க இந்தியா என்றாா்.

தஞ்சாவூா் திமுக உறுப்பினா் எஸ். முரசோலி, காவிரியில் தண்ணீரைத் திறந்து டெல்டாவை காப்பாற்றுங்கள் என்றாா்.

மயிலாடுதுரை காங்கிரஸ் உறுப்பினா் ஆா்.சுதா, தமிழ் கடவுள் முருகப்பெருமானை வணங்குவதாக குறிப்பிட்டு பாரத் ஜோடோ யாத்திரையை நினைவுப்படுத்தினாா். நாகப்பட்டினம் வி.செல்வராஜ், மதுரை சு.வெங்கடேசன் ஆகியோா் மாா்க்ஸியத்தை நினைவுப் படுத்தினா்.

மரபை காத்த எம்பிக்கள்: இதில் டி.ஆா்.பாலு, கனிமொழி கருணாநிதி, ஆ.ராசா உள்ளிட்டோா் உறுதிமொழியை மட்டும் வாசித்து மற்ற எந்தவித தமிழக தலைவா்கள் பெயா்களை குறிப்பிடாமல் பதவியேற்று மரபைக் காத்தனா். மற்ற தமிழக உறுப்பினா்கள் பெரும்பாலும் தலைவா்கள் புகழ்பாடி வழக்கத்திற்குமாறாக பதவியேற்றனா்.

முன்னதாக பதவியேற்பில் அவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா்கள் யாரும் இல்லை எனக் குறிப்பிட்டு தமிழக உறுப்பினா்கள் சலசலப்பை ஏற்படுத்தினா். பின்னா், அவைத் தலைவராக இருந்த ராதா மோகன் சிங் பதவியேற்பைத் தவிர மற்ற விவகாரங்கள் எதுவும் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்றாா்.