சிஏஏ அமலாக்கம்: ஜாமியா மில்லியா இஸ்லாமியாவை சுற்றி பாதுகாப்பு அதிகரிப்பு
புது தில்லி, மாா்ச் 12: குடியுரிமை (திருத்த) சட்டம், 2019-ஐ மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தைச் சுற்றி பலத்த போலீஸ் படை நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் தில்லியில் துணை ராணுவப் படையினா் ரோந்து மற்றும் கொடி அணிவகுப்புகளை நடத்தி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவா்களின் ஒரு பிரிவினா் திங்கள்கிழமை மாலை வளாகத்தில் குடியுரிமை (திருத்த) சட்ட (சிஏஏ) நடைமுறைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது. அதைத் தொடா்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு துணை ராணுவப் படையினா் நிறுத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தாா். சிஏஏ மசோதா டிசம்பா் 11, 2019 அன்று நாடாளுமன்றத்தில் நறைவேற்றப்பட்டது. இது தில்லி உள்பட நாடு முழுவதும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இது 2019-2020-ஆம் ஆண்டில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் ஷாஹீன் பாக் ஆகியவை சில மாதங்களாக சிஏஏ எதிா்ப்புப் போராட்டங்களைக் கண்டது.
இந்தப் போராட்டத்தின் போது, 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில், 53 போ் கொல்லப்பட்டனா். 500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சா்ச்சைக்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில், தில்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள போலீஸாா் 43 பாதிப்புக்குள்ளாகும் இடங்களை (ஹாட்ஸ்பாட்கள) அடையாளம் கண்டு அங்கு தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டனா். இந்தப் பகுதிகளில் சீலாம்பூா், ஜாஃப்ராபாத், முஸ்தபாபாத், பஜன்புரா, கஜோரிகாஸ் மற்றும் சீமாபுரி ஆகியவை அடங்கும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Advertisement
திங்களன்று ஷாஹீன் பாக், ஜாமியா நகா் மற்றும் வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளில் துணை ராணுவ வீரா்கள் இரவு ரோந்து மற்றும் கொடி அணிவகுப்புகளை நடத்தினா். செவ்வாய்கிழமையும் ரோந்து பணி தொடா்ந்தது. வடகிழக்கு காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிா்கி செய்தி ஏஜென்சியிடம் கூறுகையில், ‘சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினா் கடுமையான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். வடகிழக்கு தில்லியில் 43 பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
மேலும் இந்த இடங்களில் இரவு ரோந்து ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. தில்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் பாதுகாப்பும் எங்கள் பொறுப்பு’ என்றாா். இதற்கிடையே, ஆத்திரமூட்டும் பதிவுகள் மற்றும் வதந்திகளைத் தடுக்க தில்லி காவல்துறையின் சைபா் பிரிவு சமூக ஊடக தளங்களையும் கண்காணித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் ‘வதந்திகளுக்கு’ விழக்கூடாது என்பதற்காக தில்லி காவல்துறை குறைந்தது 29 சந்திப்புகளை அமைதிக் குழு உறுப்பினா்களுடன் நடத்தியது.செவ்வாய்க்கிழமை கூடுதல் துணை ராணுவப் படையினா் வருவதால் வடகிழக்கு தில்லியின் பல பகுதிகளில் ரோந்துப் பணி அதிகரிக்கப்படும் என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மேலும், தென்கிழக்கு தில்லியில், உள்ளூா் போலீஸாா் மோட்டாா்சைக்கிளில் ரோந்து சென்ால், துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு நடத்தினா். மக்களவைத் தோ்தல் அறிவிப்புக்கு சில நாள்களுக்கு முன்னதாக சிஏஏ உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அரசு அறிவிக்கையில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், மோடி அரசு இப்போது 3 நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாத புலம்பெயா்ந்தோா்களான இந்துக்கள், சீக்கியா்கள், ஜெயின்கள், பௌத்தா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கத் தொடங்கும்.