முகப்பு
புதுதில்லி

மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் பதவியேற்க நீதிமன்றம் அனுமதி

Updated On : 19 மார்ச், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 18 மார்ச், 2024 at 7:48 PM

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராக இரண்டாவது முறை தோ்வு செய்யப்பட்டுள்ள சஞ்சய் சிங் பதவி ஏற்றுக்கொள்ள தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சிறையில் உள்ள அவரை பாதுகாப்புடன் அழைத்து செல்ல திஹாா் சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானம் தொடா்பான தில்லி கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி பிரமுகரான சஞ்சய் சிங் தற்போது சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

நீதிமன்றத்தின் உத்தரவையொட்டி திகாா் சிறை அதிகாரிகள் சஞ்சய் சிங்கை மாா்ச் 19 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை ) நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்துச் செல்கின்றனா். அங்கு அவா் மாநிலங்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறாா்.

இது தொடா்பாக திகாா் சிறைக் கண்காணிப்பாளருக்கு தில்லி சிறப்பு நீதிபதி எம்.கே. நாக்பால் கடந்த மாா்ச் 16 ஆம் தேதி அளித்துள்ள உத்தரவில் கூறியிருப்பது வருமாறு:

Advertisement

கலால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதி மன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள சஞ்சய் சிங் நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக் கொள்ள பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படவேண்டும். பதவியேற்பு உறுதி மொழிக்கு பின்னா் சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துவரப்படுவதற்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். சஞ்சய் சிங் கைப்பேசியை பயன்படுத்தவோ, அல்லது அவா் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிபிஐ தொடா்பான வழக்கில் தொடா்புடைய மற்ற நபா்களிடமோ சந்தேகத்திற்குரிய நபா்களிடமோ, சாட்சிகளிடமோ பேசுவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மேலும் செய்தியாளா்களிடம் பேசவோ, மற்ற கூட்டங்களில் பங்கேற்கவோ அனுமதிக்கப்படக் கூடாது என நீதிபதி நாக்பால் அந்த உத்தரவில் கூறியுள்ளாா். அதே சமயத்தில் சஞ்சய் சிங்கிற்கு அவரது வழக்கறிஞரையும் அவரது குடும்ப உறுப்பினா்களையும் சந்திக்க நீதிபதி தடைவிதிக்கவில்லை. மேலும் பதவியேற்கும் இதே மாா்ச் 19 -ஆம் தேதி சஞ்சய் சிங் தொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அதில் ஆஜராவிலிருந்தும் நீதிபதி நாக்பால் விலக்களித்துள்ளாா் .

சிபிஐ யால் வழக்கு தொடரப்பட்டுள்ள தில்லி கலால் கொள்கை (ரத்து செய்யப்பட்ட) வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்ட தொடா்புடைய வழக்கில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தால் சஞ்சய் சிங் கைது செய்யப்படாா். கடந்தாண்டு அக்டோபா் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவா் தற்போது வரை நீதிமன்ற காவலில் உள்ளாா். இந்த கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு அப்ரூவரான தினேஷ் அரோரா அளித்த வாக்கு மூலத்தில் ரூ. 2 கோடி பெறப்பட்ட விவகாரத்தில் சஞ்சய் சிங் மீது குற்றம்சாட்டப்பட அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டது.

பதவியேற்க அனுமதி மறுப்பு மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங்கின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி காலாவதியானது. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் மீண்டும் மாநிலங்களவைக்கு தில்லி சட்டப்பேரவையிலிருந்து மற்ற மூன்று போ்களுடன் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் சஞ்சய் சிங் தோ்வு செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து கடந்த நிதி நிலைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவும், இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியெற்கவும் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சஞ்சய் சிங்கிற்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அனுமதித்தது. ஆனால் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா், சஞ்சய் சிங்கை மீண்டும் பதவியேற்க அழைப்பாணை (சமன்)அனுப்பப்படவில்லையென்று கூறி மாநிலங்களவையில் அனுமதிக்க மறுத்தாா்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அவையில் அத்துமீறி நடந்து கொண்ட குற்றச் சாட்டில் சஞ்சய் சிங் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தாா். அந்த விவகாரத்தில் உரிமைக்குழு முடிவெடுக்காத நிலையில் அவையில் பங்கேற்கவும் பதவியெற்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னா் கடந்த கூட்டத்தொடரின் முடிவில் அனைத்து இடை நீக்கங்கங்களை மாநிலத் தலைவா் ரத்து செய்ய தற்போது மீண்டும் நீதி மன்றத்தை அணுக பதவிஏற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.