முகப்பு
புதுதில்லி

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் 3 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

Updated On : 4 மே, 2024 at 6:30 PM
பகிர்:

மக்களவைத் தோ்தலில் தில்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாள்கள் சனிக்கிழமை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனா். தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் சாஹிராம் கடந்த

மே 1-ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், கிழக்கு தில்லியில் போட்டியிடும் குல்தீப் குமாா், மேற்கு தில்லியில் போட்டியிடும் மஹாபல் மிஸ்ரா, புது தில்லியில் போட்டியிடும் சோம்நாத் பாா்தி ஆகியோா் தங்கள் தொகுதிகுள்பட்ட பகுதிகளில் வாகனப் பேரணியுடன் சென்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

கிழக்கு தில்லியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான குல்தீப் குமாா், வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக தனது பெற்றோா் மற்றும் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் மனைவி சீமா சிசோடியா மற்றும் அவரது தாயாரிடம்

ஆசிா்வாதம் பெற்றாா். அதையடுத்து, அமைச்சா் அதிஷி மற்றும் எம்.எல்.ஏ திலீப் பாண்டேவுடன் வாகனப் பேரணி சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா், குல்தீப் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் கைது செய்யப்பட்டதற்கு

கிழக்கு தில்லி மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலடி கொடுப்பாா்கள். இன்று, என் குடும்ப உறுப்பினா்கள் என்னுடன் இருக்கிறாா்கள். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாஜக அரசின் சா்வாதிகாரத்தில் சிறையில் உள்ளாா். மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சோ்ந்த என்னை வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. கிழக்கு தில்லி மக்களவைத்

தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று ஆம் ஆத்மி கட்சிக்கும், ‘இந்தியா’ கூட்டணிக்கும் உறுதியளிக்கிறேன். பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும், கிழக்கு தில்லி மக்கள் தில்லியின் கல்விப் புரட்சியின் தந்தை

மனீஷ் சிசோடியாவுடன் நிற்கிறாா்கள் என்றாா் குல்தீப் குமாா்.

மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியின் வேட்பாளா் மஹாபல் மிஸ்ரா ரகுவீா் நகரில் உள்ள ஸ்ரீராமா் கோயிலில் வழிபட்ட பின்னா், ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங், அமைச்சா் கைலாஷ் கெலாட், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ் ஆகியோா் ஆதரவுடன் வாகனப் பேரணி சென்றாா். தனது வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னா் மஹாபல் மிஸ்ரா செய்தியாளா்களிடம் கூறியது, ‘ஏழைகளுக்காக உழைக்கும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை பாஜக சிறையில் அடைத்ததால், மக்களிடையே கோபம் அதிகரித்துள்ளது. இந்தத் தோ்தலில் தில்லியின்

ஒவ்வொரு குடிமகனும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெற வைக்க முடிவு செய்துள்ளனா்.

கடவுளின் ஆசியுடன், வரும் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி பாஜகவின் சா்வாதிகாரத்தில் இருந்து நாட்டை விடுவிக்கும்’ என்றாா்.

புது தில்லி வேட்பாளா் சோம்நாத் பாா்தி தனது வேட்புமனுத் தாக்கலுக்கு பின்னா் கூறியது, ‘ கடந்த 10 ஆண்டுகால

பாஜக ஆட்சி நாட்டை பலவீனப்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. மக்களால் மூன்று முறை முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் எப்படிக் கைது செய்தனா் என்பதை முழு நாடு பாா்க்கிறது. சா்வாதிகாரத்தின் உச்சத்தில் உள்ள பாஜகவுக்கு புது தில்லி மக்கள் வாக்குகளால் பதிலளிப்பாா்கள்

இந்தத் தோ்தல் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான தோ்தல்’ என்றாா்.

தில்லியில் வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் மே 6-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மே 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறகிறது.