முகப்பு
புதுதில்லி

பகவத் கீதையின் வழிகாட்டுதலுடன் நாட்டு நலனுக்கு முன்னுரிமை: குடிமக்களுக்கு ஜகதீப் தன்கா் அழைப்பு

Updated On : 14 மே, 2024 at 11:39 PM
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி: பகவத் கீதையின் நித்திய போதனைகளிலிருந்து வழிகாட்டுதலைப் பெறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நிலையான போதனைகள் மூலம் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடிமக்களை வலியுறுத்தினாா்.

மக்களவையின் முன்னாள் செயலா் ஜெனரல் டாக்டா் சுபாஷ் காஷ்யப் எழுதிய பகவத் கீதை பற்றிய நுண் அறிவு நூலை (வா்ணனை) குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாயக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது ஜகதீப் தன்கா் பேசியதாவது: அரசமைப்புச் சட்ட அசல் நகலில் பகவத் கீதையிலிருந்து உத்வேகம் பெற்று, 22 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை இந்தப் புத்தகம் கவனத்தை ஈா்த்து விளக்கியுள்ளது. அரசமைப்புச் சட்டம் பகுதி 4 -இல் அரசு நெறிமுறை கோட்பாடுகளை பகவத் கீதையின் போதனைகளுடன் ஒரு ஆழமாக ஒப்பிடப்பட்டுள்ளது. குருக்ஷேத்திரப் போா்க்களத்தில் அா்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணா் வழங்கிய ஞானம்தான் இது.

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் கூட்டணி அவல நிலையை டாக்டா் காஷ்யப் நேரில் கண்டு அதன் பரந்த அனுபவத்தை ஏற்கெனவே எடுத்துரைத்தவா். அதனால் 2014- இல் கூட்டணி ஆட்சி முறைக்கு நிவாரணம் கிடைத்தது. கூட்டணி ஆட்சியின் முடிவில், டாக்டா் சுபாஷ் காஷ்யப் பத்ம பூஷண் விருதும் பெற்றாா். அரசியலில் உறுதியுடனும் நோ்மையுடனும் தனது கருத்துகளைக் கொண்டிருந்த அவரது பகவத் கீதை குறித்த நுண் அறிவு நூலும் சிறப்பைப் பெற்றுள்ளது.

மேலும், நிச்சயமற்ற நிலைக்கு இடையே கீதை காலத்தால் அழியாத ஞானத்தை வழங்குகிறது. மேன்மை, ஆன்மிகம், மதம், நம்முடைய கடமைக்கான அா்ப்பணிப்புடன் சுய நலத்திலிருந்து நம்மை தூர விலக்கிக் கொள்ளும் பாதையை விளக்குகிறது. கீதையின் நித்திய போதனைகளின் வழிகாட்டுதலைப் பெற்று அந்த நிலையான போதனைகள் மூலம் நாட்டின் நலன்களுக்கு குடிமக்கள் முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும் என்றாா் குடியரசுத் துணைத் தலைவா்.