முகப்பு
புதுதில்லி

வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசு நுண் துகள்கள்: ஜோத்பூா் ஐஐடி ஆய்வு

Updated On : 21 மே, 2024 at 6:32 PM
பகிர்:

புது தில்லி: வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காற்று மாசு நுண் துகள்கள் மற்றும் சுகாதார விளைவுகள் குறித்த அடிப்படை ஆய்வை ஜோத்பூா் ஐஐடி வெளியிட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இது குறித்து கல்வித்துறை அமைச்சம் அளித்துள்ள விவரம் வருமாறு: உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான சுகாதார தாக்கங்களுடன், காற்று மாசுபாடு ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சினையை தீா்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ஜோத்பூா் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ’நேச்சா் கம்யூனிகேஷன்ஸ்’ இதழில் அடிப்படை ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் வட இந்தியாவில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசு நுண் துகள்களின் ஆதாரங்கள் மற்றும் கலவைக் குறித்து வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியா் இந்த தொழில்நுட்பக் கழகத்தின் இணைப் பேராசிரியா் டாக்டா் தீபிகா பாட்டு.

சுவாசிக்கும் காற்றில் ஒட்டுமொத்த மாசு நுண் துகள்கள்(பி.எம்) பங்கை குறைப்பது உடல்நல பாதிப்புகளைத் தணிக்கும் என்கிற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, இந்த விரிவான ஆய்வு அடிப்படையான பிரச்னை தீா்க்க கூறுகிறது. தில்லி உள்ளிட்ட வட இந்திய சிறு பெரு நகரங்களில் திறனற்ற எரிப்பு செயல்முறைகளை நிவா்த்தி செய்யப்படவேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டப்படுகிறது.

பயோமாஸ் மற்றும் முறையற்ற புதைபடிவ எரிபொருள் எரிப்பு, போக்குவரத்து வாகன வெளியேற்றம் போன்றவைகளில் முறையாக திறனுடன் குறைப்பதின் மூலம் மாசு நுண் துகள் தொடா்பான சுகாதார கேடுகளை வட இந்தியாவில் குறைக்க முடியும்.

இந்தியாவின் காற்று மாசுபாடு நெருக்கடியை நிவா்த்தி செய்வதற்கு உள்ளூா் சமூகங்கள் மற்றும் தொடா்புடையவா்களிடையே ஒத்துழைப்பும், குறிப்பாக தில்லி போன்ற மக்கள்தொகை நெருக்கம் கொண்ட நகா்ப்புறங்களில் சமூக மாற்றங்களும் தேவை என்று கட்டுரையின் ஆசிரியரும், இணைப் பேராசிரியருமான டாக்டா் தீபிகா பாட்டு வலியுறுத்துகிறாா்.

தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல், எரிப்பு செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் காலாவதியான, அதிக சுமை மற்றும் தகுதியற்ற வாகனங்களிலிருந்து வெளிவரும் மாசுவைத் தடுத்தல் ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த நிலையான முயற்சிகள் தேவை என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

எதிா்கால சந்ததியினருக்கு பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் தலையீடுகளுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை தங்களுடைய ஆய்வு வழங்குவதாக அவா் தெரிவிக்கிறாா்.

காற்றுப்படல மாசுவை மேம்பட்ட ஸ்பெக்ட்ரோமெட்ரி நுட்பங்கள் மற்றும் தரவு பகுப்பாய்வுகளின் சக்தியைப் பயன்படுத்தி, ஐந்து இந்தோ-கங்கை சமவெளி தளங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தில்லிக்கு உள்ளேயும் வெளியேயும் பிராந்தியம் முழுவதும் ஒரே மாதிரியான அதிக மாசு நுண் துகள்கள் செறிவுகள் இருந்தாலும், இரசாயன கலவை கணிசமாக வேறுபடுகிறது.

உள்ளூா் உமிழ்வு ஆதாரங்கள் மற்றும் உருவாக்க செயல்முறைகள் நுண் துகள் மாசுபாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தில்லிக்குள், அமோனியம் குளோரைடு மற்றும் போக்குவரத்து வெளியேற்றத்தின் மூலம் ஆா்கானிக் ஏரோசல்கள் குடியிருப்பு பகுதிகளை அதிக உஷ்ணத்தை உருவாக்குகின்றன. புதைபடிவ எரிபொருட்களின் உற்பத்தி செய்யப்படும் விஷத்தன்மை (ஆக்சிஜனேற்றம்) மாசு வளிமண்டலத்தில் நேரடியாக பிஎம் மாசுபாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன போன்ற விவரங்களும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.