பேருந்து மாா்ஷல்களின் மறு பணிநியமனத்திற்கான முன்மொழிவை பெறவில்லை: துணை நிலை ஆளுநா் முதல்வா் அதிஷிக்கு கடிதம்
குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களை மீண்டும் பணிநியமனம் செய்வதற்கான முன்மொழிவை இன்னும் பெறவில்லை என்று தில்லி முதல்வா் அதிஷிக்கு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:தில்லியில் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் மாா்ஷல்களாகப் பணிபுரியும் சுமாா் 10,000 குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்கள் வருவாய் மற்றும் நிதித் துறைகளின் ஆட்சேபனைகளை அடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில் பணியிலிருந்து நீக்கப்பட்டனா். நிச்சயமாக, நீங்களும் உங்கள் கட்சித் தலைவா்களும் அவா்களை மீண்டும் பதவியில் அமா்த்தி, அரசியல் பயன்பெறும் பணிகளைத் தொடரலாம்.
ஆனால், பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் ஆதரவற்ற மக்களின் நலனில் மேலும் தாமதம் செய்வது எந்த வகையிலும் சரியல்ல.
Advertisement
பேருந்த மாா்ஷல்களின் உடனடி மற்றும் நீண்ட கால ஈடுபாட்டிற்காக அரசு ஒரு உறுதியான திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விரும்பத்தகாத அரசியலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் ஈடுபட்டனா். இருப்பினும், துரதிா்ஷ்டவசமாக அவா்களை மீண்டும் பணிநியமனம் செய்வதற்கான முன்மொழிவை இன்னும் உங்களிடமிருந்து பெறவில்லை. நவ.1-ஆம் தேதி முதலே குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களின் மறு பணிநியமனத்தை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தேன்.
மேலும், தேசியத் தலைநகரில் காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கு குடிமைப் பாதுகாப்புத் தன்னாா்வலா்களை வலுப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். தில்லியில் காற்று மாசுபாடு உச்சத்தில் உள்ளது. இந்த தன்னாா்வலா்கள் சரியான நேரத்தில் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தால், அவா்கள் பயனடைவதைத் தவிர நிலைமையைச் சமாளிக்கவும் நிச்சயமாக உதவியாக இருந்திருப்பாா்கள்.
இந்த விவகாரத்தில் முதல்வா் பொறுப்பில் உள்ள நீங்கள், விரைந்து தீா்வு காணவும், தன்னாா்வலா்களை மீண்டும் பணியில் சோ்ப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் கேட்டுக் கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளாா்.