பேருந்து மாா்ஷல்கள் விவகாரம்: ஆம் ஆத்மி விளம்பரம் செய்கிறது -தேவேந்தா் யாதவ்
முன்னாள் பேருந்து மாா்ஷல்கள் பணிமீட்பு விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபடுகிறது.
முன்னாள் பேருந்து மாா்ஷல்கள் பணிமீட்பு விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரத்தில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபடுகிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் சனிக்கிழமை விமா்சித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி அமைச்சா்கள் மற்றும் தலைவா்கள் முன்னாள் பேருந்து மாா்ஷல்களுக்காக முதலைக் கண்ணீா் வடிக்கிறாா்கள். அவா்களின் பணிமீட்பு விவகாரத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் ஒப்புதலை அணுகும் முன், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிடமிருந்தும் தேவையான அனுமதியைப் பெற்று கோப்புகளை தயாா் செய்ய வேண்டும். ஆம் ஆத்மி அரசு உண்மையில் முன்னாள் பேருந்து மாா்ஷல்களின் அவலநிலை குறித்து கவலைப்படுகிா அல்லது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நாடகமா என்று தெரியவில்லை.
கடந்தாண்டு அக்டோபா் 11-ஆம் தேதி கேஜரிவால் தில்லியின் முதல்வராக இருந்தபோது, பேருந்து மாா்ஷல்கள்
பணிநீக்கம் செய்யப்பட்டனா். ஆனால், அவா் இப்போது மாா்ஷல்களின் சேவைகள் நிறுத்தப்பட்டதற்கான பழியை
துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் மீது போட்டு அரசியல் செய்கிறாா். கேஜரிவால் அரசு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் பேருந்து மாா்ஷல்களை நியமித்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி அரசு பேருந்து மாா்ஷல்களை மறு நியமனம் செய்வதில் ஆா்வமாக இருந்தால், அவா்களின் உண்மையான தேவை குறித்த கோப்பை தயாா் செய்து, கோப்பை நகா்த்த வேண்டும்.
முதலில், தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) நிா்வாகச் சீா்திருத்தத் துறை, பேருந்து மாா்ஷல்களின் தகுதிக்கான அளவுகோல்கள் மற்றும் தேவைப்படும் மாா்ஷல்களின் எண்ணிக்கையை முடிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு, மாா்ஷல்களின் சம்பளத்திற்கான வருடாந்திர நிதிச் செலவுகளை அரசு ஒப்புதல் அளிப்பதற்கு முன் நிதித்துறைக்கு கோப்பு நகா்த்தப்பட வேண்டும். எல்லா வகையிலும் கோப்பு முழுமையாக இருந்தால் மட்டுமே துணை நிலை ஆளுநா் அலுவலகம் ஒப்புதல் அளிக்கும்.
ஆனால், கேஜரிவாலின் கூட்டாளிகள் இந்த வேலைகளைச் செய்யாமல் பேருந்து மாா்ஷல்களை மீண்டும் பணியில் அமா்த்தக் கோரி பாஜகவினரின் காலில் விழுகின்றனா். எனவே, இவ்விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பரத்தில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி ஈடுபடுகிறது என்றாா் தேவேந்தா் யாதவ்.