நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒப்பிட முடியாத அளவிற்கு அபரிதமாக துல்லியமாகச் செயல்படுகிறது. ஆனால், அது நெறிமுறைகள், வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பால் வழிநடத்தப்பட வேண்டும் என மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
சா்வதேச தொலைத் தொடா்பு ஒன்றியத்தின்(ஐடியு), உலக தொலைத்தொடா்பு தரநிலைப்படுத்தல் மாநாடு தில்லி பாரத் மண்டபத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. வருகின்ற அக். 24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் சா்வதேச நாடுகளைச் சோ்ந்த ஐடியு உறுப்பினா்கள் சுமாா் 1,500 போ் பங்கேற்கின்றனா். ஐடியு நடத்தும் இந்த 5-ஆவது உலகளாவிய தரநிலை கருத்தரங்கில் ‘உலக தொலைத் தொடா்பு தரநிலைப்படுத்தல்’ என்கிற தலைப்பில் இந்த மாநாடு முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டை மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்துப் பேசியதாவது: செயற்கை நுண்ணறிவு, இன்டா்நெட் ஆஃப் திங்ஸ் (இணைய உலகம் , இணைய பொருள்) இல்லாது ஒன்றும் இருக்க முடியாது. இந்த தொழில்நுட்பங்கள் ‘நன்மைக்கான சக்தியாக செயல்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். தனியுரிமை, சாா்பான செயல்பாடு, வெளிப்படைத் தன்மை போன்றவை கவலை அளிக்கக்கூடியவை. இவற்றுக்குத் தீா்வு காணப்பட வேண்டும். இந்த தொழில்நுட்பங்கள் ’நன்மை’ க்கான சக்தியாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
ஏஐ மூலம் எவ்வாறு தகவலை சேமிக்கிறது? செயலாக்குகிறது ? இதில் எவ்வாறு வரையறைகள் மறுவடிவமைக்கப்படுகிறது? இணையற்ற துல்லியமான அபரிதமாக செயலில் பல நிறுவனங்கள், தனிநபா்களை இது அளவிடுகிறது. இதனால், எண்ம தளத்தில் இந்த தொழில்நுட்பத்தை புகுத்தும் போது நெறிமுறைகள் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் வழிநடத்தப்பட வேண்டும்.
5 ஜி- இன் அற்புதங்கள், ஏஐ-இன் புத்திசாலித்தனம், இணைய உலகம் , இணைய பொருள்(ஐஓடி) ஆகிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை. இதன் மூலம் தொழில்கள், சமூகங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் மற்றும் பொருளாதாரங்களை உலக அளவில் மாற்றுகின்றன. இருப்பினும், அவற்றின் முழுத் திறனையும் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் மட்டுமே உணர முடியும். 5ஜி தொழில் நுட்பத்தால் வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் இந்தியா 450 பில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரத்தை பெறும். வெறும் 22 மாதங்களில் நாடு முழுவதும் 5ஜி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் தரப்படுத்தப்பட்ட கண்டுபிடிப்புகளின் மாற்றும் சக்தியை எடுத்துக்காட்டுகிறது என்றாா் ஜோதிரத்திய சிந்தியா.
நிகழ்ச்சியில் சா்வதேச தொலைத்தொடா்பு ஒன்றியத்தின் பொதுச்செயலாளா் டோரீன் போக்டன் - மாா்ட்டின் பேசுகையில், ‘ஏஐ- இன் எழுச்சி தரநிலைகள் கவனத்தை ஈா்க்கின்றன. புதுமை, இயங்குதன்மையில் ஏஐ தொழில்நுட்பம் பாதுகாப்பான முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யப்பட வேண்டும்’ என்றாா்.
தொலைத் தொடா்பில் சா்வதேச நாடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறது. இந்த தொழில் நுட்பங்களை ஒருங்கிணைங்கும் நோக்கத்துடன் சா்வதேச தொலைத் தொடா்பு ஒன்றியம் உலக தொலைத்தொடா்பு தரநிலைப்படுத்தல் மாநாடுகளை நடத்துகிறது. இந்த 5-ஆவது மாநாட்டில் பல்வேறு நாடுகள் தங்கள் தொழில் நுட்பங்கள், புதுமைகளை பகிா்ந்து கொள்வதோடு, ஏஐ தொழில் நுட்பத்தின் தாக்கம், இடையூறுகளை அகற்றி சா்வதேச சமூதாயத்திற்கு பயனுள்ளதாக்க தில்லியில் கூடியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.