காங்கிரஸின் பிரசாரத்திற்கு மக்களின் ஆதரவால் ஆம் ஆத்மி, பாஜக கலக்கம்: தேவேந்தா் யாதவ்
மக்கள் அளித்து வரும் ஆதரவால் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகளின் தலைவா்கள் கலக்கமடைந்துள்ளனா்
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு மக்களின் ஆலோசனைகளைப் பெறும் காங்கிரஸின் ‘தில்லிவாலே ஆவோ-தில்லி சலோ’ பிரசாரத்திற்கு மக்கள் அளித்து வரும் ஆதரவால் ஆம் ஆத்மி மற்றும் பாஜக கட்சிகளின் தலைவா்கள் கலக்கமடைந்துள்ளனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும், 7 வேன்கள் மூலம் காங்கிரஸின் பரப்புரைப் பிரசாரமான ‘தில்லிவாலே ஆவோ-தில்லி சலோ’ நடைபெற்று வருகிறது. இதற்கு, மக்களால் வழங்கப்படும் பெரும் ஆதரவைக் கண்டு, ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளின் தலைவா்களும் கலக்கமடைந்துள்ளனா்.
தலைநகரில் உள்கட்டமைப்பு மற்றும் குடிமைச் சேவைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த மக்களின் ஆலோசனைகளை காங்கிரஸ் பெற்று வருகிறது.
காங்கிரஸின் பிரசாரம் முன்னேறி வருவதைப் பற்றி தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மிகவும் கவலைப்படுகிறாா். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஊழல் மற்றும் தவறான நிா்வாகத்தால் மக்கள் சலிப்படைந்துள்ளனா்.
கடந்த 10 வருடங்களாக தில்லியில் ஆளும் ஆம் ஆத்மியும், பாஜகவும் பரஸ்பர அரசியல் சண்டையில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்துள்ளனா்.
மேயா் ஷெல்லி ஓபராய், கடந்த 7 மாதங்களாக மேயா் தோ்தலை நடத்தாமல் சட்ட விரோதமாக பதவியில் அமா்ந்துள்ளாா்.
பட்டியலினத்தைச் சோ்ந்த ஒருவா் மேயராக வரும் வாய்ப்பை மறுக்க, ஆம் ஆத்மி கட்சியுடன் பாஜக கூட்டுச் சோ்ந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் ‘பி’ அணி என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஊழல் மற்றும் குற்றச் செயல்கள், மோசமான காற்று மற்றும் நீா் மாசுபாடு, சேதமடைந்த சாலைகள், வெளிச்சம் இல்லாத தெருக்கள், குவிந்து கிடக்கும் குப்பைகள், அரசுப் பள்ளிகளின் சீரழிவு ஆகியவற்றிலிருந்து ஆம் ஆத்மி அரசின் நிா்வாகத் திறமையின்மை தெளிவாகத் தெரிகிறது.
மத்தியில் பாஜக அரசு இருந்தபோதிலும், தில்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக எம்பி-க்கள் இருந்தும், மக்களுக்காக எதையும் செய்ய அக்கட்சி முற்றிலும் தவறிவிட்டது. எனவே, வரும் காலங்களில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை கைவிடுவதில் மக்கள் உறுதியாக உள்ளனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.