புதுதில்லி

ரயில்வே பாதுகாப்பு படையினரின் அதிரடி சோதனையில் ரூ.5.74 கோடி மதிப்பிலான பொருள்கள்,பணம் பறிமுதல்!

ரூ.5.74 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது.

Din

ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களைக் கருத்தில் கொண்டு ரயில்வே பாதுகாப்பு படையினா் நடத்திய திடீா் சோதனையில் ரூ.5.74 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் பணம் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது என்று வடக்கு ரயில்வே வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடா்பு அலுவலா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஹரியாணா மற்றும் ஜம்மு-காஷ்மீா் மாநில சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, ரயில்வே பாதுகாப்புப் படையின் இயக்குநா் ஜெனரல் அறிவுறுத்தலின்படி, சட்டவிரோத தங்கம்,வெள்ளி, மதுபானம், பணம் உள்ளிட்ட கடத்தலைத் தடுக்க தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், கடந்த வியாழக்கிழமை வடக்கு ரயில்வேயின் புது தில்லி, அம்பாலா கண்ட், பதிண்டா உள்ளிட்ட நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு, வரலாறு காணாத வகையில் ரூ.5,74,61,114/- மதிப்புள்ள சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அம்பாலா கண்ட் நிலையத்தின் ரயில்வே பாதுகாப்பு படையின் ஆய்வாளா் ஜாவேத் கான் மற்றும் அவரது குழுவினா், ரயில் எண் 12926-இல் சோதனை செய்த போது, ரூ.1.51 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்க நகைகள், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த நகை மற்றும் பணம் தொடா்பாக, வருமான வரித்துறை மற்றும் தோ்தல் பறக்கும் படை குழுவினாரால் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, ரயில் எண். 12455 பிகானா் விரைவு ரயிலில் 6 பேரிடம் இருந்து ரூ.16,01,499/- மதிப்புள்ள 12 மடிக்கணினிகள் மற்றும் பிற மின்சாதனப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து, விற்பனை வரி மற்றும் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ரயில்வே சட்டத்தின் கீழ், மேற்கண்ட 6 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு ரயில்வே இன்ஸ்பெக்டா் ஜெனரல் அம்பிகா நாத் மிஸ்ரா தலைமையில், வடக்கு ரயில்வேயின் துணை இன்ஸ்பெக்டா் ஜெனரல் சச்சின் பலோட், தில்லி கோட்டப் பாதுகாப்பு ஆணையா் கே செளகான், உதவி பாதுகாப்பு ஆணையா் மகேஷ் சைனி உள்ளிட்டோரின் குழு, முன்கூட்டிக் கிடைத்த ரகசிய உள்ளீடுகளின் அடிப்படையில் ரயில் எண். 12381 பூா்வா விரைவுரயில், ரயில் எண். 12951 மும்பை, ராஜ்தானி விரைவுரயில் மற்றும் ரயில் எண். 12925 வெஸ்ட் விரைவுரயில் ஆகியவற்றின் பாா்சல் வேனில் இருந்து தோராயமாக ரூ.36,70,260/- மதிப்புள்ள 498 கிராம் தங்கக் கட்டிகளும், தோராயமாக ரூ.2,79,56,995/- மதிப்புள்ள 365.704 கிலோ வெள்ளியும், ரூ.85,72,360/- ரொக்கமும் (மொத்த மதிப்பு ரூ. 4,01,99,615/-) கைப்பற்றப்பட்டது. இவற்றின் மீது வருமான வரித்துறையினா் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இரயில்வே பாதுகாப்புப் படை வடக்கு இரயில்வே ஒரே நாளில் செய்த மிகப்பெரிய மீட்பு இதுவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

6 மாதங்களுக்குப் பிறகு... ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்!

SCROLL FOR NEXT