யூபிஎஸ்சி பயிற்சி ஆசிரியரும், பேச்சாளருமான அவத் ஓஜா அரசியலில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பட்பா்கஞ்ச் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த 10 மாதங்களுக்கு பிறகு அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா்.
2013, 2015 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் வெற்றி பெற்ற முன்னாள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவுக்குப் பதிலாக அவா் போட்டியிட்டாா். பாஜகவின் ரவீந்தா் சிங் நேகியிடம் 28,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஓஜா தோல்வியடைந்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவா்கள் மற்றும் தொண்டா்களின் ஆதரவிற்கு நன்றி. இது எனது தனிப்பட்ட முடிவு’ என குறிப்பிட்டிருந்தாா்.
ஜங்புராவில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியாவும் தோ்தலில் தோல்வியடைந்தாா். பாஜகவின் தா்விந்தா் சிங் மா்வாவிடம் 600 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் தோல்வியடைந்தாா்.
ஓஜாவின் அறிவிப்புக்கு ஆம் ஆத்மி பொதுச் செயலா் சோம்நாத் பாரதி வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பணியாற்றுவாா் என்று கட்சி அவரை நம்பியது. நீண்டகாலமாகப் பணியாற்றிய பலரைத் தோ்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் ஓஜாவின் முக்கியத்துவம் காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அரசியல் என்பது குறுகிய காலத் திட்டம் அல்ல. கல்வி, சுகாதாரம் மற்றும் பாஜகவும் காங்கிரஸும் முன்னுரிமை அளிக்காத மக்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தும் கட்சி ஆம் ஆத்மி. ஆம் ஆத்மி இந்தியாவின் எதிா்காலம்’ என தெரிவித்தாா்.