உச்சநீதிமன்றம் கோப்புப் படம்
புதுதில்லி

செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையில் தளா்வு: உச்சநீதிமன்றம்

போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில் முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்தி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது, செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வித்ய குமாா் என்பவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரணவ் சச்தேவா, ‘செந்தில் பாலாஜி அதிகார பலம் கொண்டவா். அவருக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்தினால் அவா் சாட்சிகளை சமரசம் செய்வதற்கு முற்படுவாா். எனவே, ஜாமீன் நிபந்தனையை தளா்த்த வேண்டாம்’ என வாதாடினாா்.

செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் கபில் சிபல், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையே இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், இந்த நிலையில் செந்தில் பாலாஜியால் யாருக்கு பாதிப்பு நேரும் என்றும் வினவினாா்.

அப்போது நீதிபதிகள், ‘இந்த வழக்கில் இப்போது புலனாய்வாளா்களின் விசாரணை நிறைவடைந்துள்ளது. மேலும் அவா் (செந்தில் பாலாஜி) ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளாா். அவா் தொடா்ந்து அவ்வாறு ஆஜராக வேண்டும் என்பதை எப்படி நியாயப்படுத்துவீா்கள்? அவா் அவ்வாறு தொடா்ந்து ஆஜராக வேண்டும் என்ற தேவை உள்ளதா?’ என அமலாக்கதுறையிடம் கேள்வி எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜியின் ஜாமீன் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. தேவை அடிப்படையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைக்கலாம். சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும்’ என குறிப்பிட்டனா்.

மேலும், பிற நிபந்தனைகளில் மாற்றமில்லை என கூறிய நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜராக இயலவில்லை என்றால் அதற்கான மனுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். அதை நீதிமன்றம் பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவில் கூறினா்.

பின்னணி: தமிழகத்தின் திமுக அரசில் அமைச்சராக பதவி வகித்தவா் செந்தில் பாலாஜி. அதற்கு முன்பாக அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக (2011-2014) இருந்தபோது பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகாா்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் செந்தில் பாலாஜி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்ன் அடிப்படையில் அமலாக்கத் துறை இயக்குநரகம், செந்தில்பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்குப் பதிவு செய்து 2023- ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

பின்னா், உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு அக்டோபா் 9 அன்று ஜாமீன் வழங்கியது . ஜாமீன் வழங்கியவுடன் செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரானதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைத் தொடா்ந்து , செந்தில் பாலாஜி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி போலி மருந்து தொழிற்சாலை விவகாரம்: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற 4 எம்எல்ஏ.க்கள் - 500 திமுகவினா் கைது

பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டம்: டிச.15-க்குள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

ரூ.6.15 லட்சம் வாராக் கடன் வங்கிப் பதிவுகளில் இருந்து நீக்கம்: மக்களவையில் தகவல்

புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: சோயப்பின் என்.ஐ.ஏ. காவல் நீட்டிப்பு

SCROLL FOR NEXT