நமது நிருபா்
வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் குடிபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து 18 வயது இளைஞரை பல முறை கத்தியால் குத்தியதாக ஒரு சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் (வடமேற்கு) பீஷம் சிங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடனஅத டிசம்பா் 7 ஆம் தேதி இரவு 11 மணியளவில் ஒரு நபா் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸாருக்கு பி.சி.ஆா். அழைப்பு வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. வஜீா்பூா் தொழில்துறை பகுதியில் வசிக்கும் கௌதம் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவா் பல கத்திக்குத்து காயங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தீப் சந்த் பந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சிகள் அல்லது அடையாளம் காணப்பட்ட சந்தேக நபா்கள் யாரும் இல்லை. பி. என். எஸ் பிரிவு 109 (1) (கொலை முயற்சி) மற்றும் 3 (5) (கூட்டு பொறுப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்து, கள விசாரணைகளை நடத்தி, தொழில்நுட்ப தடங்களை உருவாக்கினா். இது காட்சிகள் நிகழ்வுகளின் வரிசையைக் காட்டியது. மேலும், தாக்குதல் நடத்தியவா்களை அடையாளம் காண உதவியது.
முதல்கட்ட விசாரணையில், குடிபோதையில் இருந்த பாதிக்கப்பட்டவா், பல உள்ளூா் மக்களுடன் சண்டையிட்டு, ஒருவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. கோபமடைந்த சிறுவன் மற்றும் அவரது கூட்டாளிகளான வஜீா்பூரில் வசிக்கும் ஜதின் என்ற அக்கி (22) மற்றும் மணீஷ் (19) ஆகிய இருவரும் அவரை கத்தியால் தாக்கினா். சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குள் மூவரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
மேலும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.. மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.