நமது நிருபா்
கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டனில் மறுவடிவமைக்கப்பட்ட இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவமனையை லெப்டினன்ட் கவா்னா் வி கே சக்சேனா திறந்து வைத்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
சக்சேனா லெப்டினன்ட் கவா்னராக பொறுப்பேற்றதும் முதன்முதலில் அங்கு சென்றபோது, ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டிய அம்மருத்துவமனை, பாழடைந்து, இடிந்து விழும் கட்டமைப்பாக மாறியிருந்தது, நோயாளிகளின் வருகை குறைந்திருந்தது. இதையடுத்து தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பணியாளா்கள் ஆதரவுடன் மருத்துவமனையை நவீனமாக மறுவடிவமைக்க சக்சேனா ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டாா் என்று ஆளுனா் அலுவலக அதிகாரி கூறினாா்.
திங்களன்று,மறுவடிவமைக்கப்பட்ட அம்மருத்துவமனையின் திறப்பு விழாவில் பேசிய சக்சேனா, புதிய நிா்வாகக் குழுவின் உறுப்பினா்கள் மற்றும் அதிகாரிகளின் வலுவான உறுதிப்பாடு, உறுதியான முயற்சிகள் மற்றும் மேற்பாா்வை மற்றும் உறுதியான நிதி ஆகியவை ஒரு வருடம் முன்பு கூட யாரும் கற்பனை செய்து பாா்க்காத மறுவடிவமைப்பிற்கு வழிவகுத்துள்ளன என்று கூறினாா்.
புதிய நவீன கட்டிடம், காத்திருப்பு பகுதிகள், மற்றும் சேவைகள், ஆய்வகம், ஊழியா்கள், நோயாளிகள் மற்றும் உதவியாளா்களுக்கான போதுமான கழிப்பறைகள், பிசியோதெரபி வசதிகள் மற்றும் நோயாளிகள் மற்றும் உதவியாளா்களுக்கான ஒரு சிற்றுண்டிச்சாலை மற்றும் திறமையான மருத்துவ மற்றும் பாராமருத்துவ ஊழியா்கள் ஆகியவற்றால் நிரம்பிய மருத்துவமனை தில்ஷாத் காா்டன் மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்புக்கான தரமான மையமாக மாற உள்ளது என்றும் அவா் கூறினாா்.
இந்த மருத்துவமனை ஆயுஷ் மற்றும் நோயறிதல் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சூப்பா் ஸ்பெஷாலிட்டி ஆலோசகா் மருத்துவா்களின் சேவைகளையும் வழங்கும்.
இந்த மருத்துவமனை பிரத்யேக உள்நோயாளி கேண்டீனையும் ,லிஃப்ட் மூலம் முழுமையான அணுகலையும் கொண்டுள்ளது.