நமது நிருபா்
புது தில்லி: தில்லியின் காற்றின் தரக் குறியீடு திங்கட்கிழமை காலையில் 498 புள்ளிகளைத் தொட்டு, மாலையில் 427 இல் நிலைபெற்று காற்றின் தரம் ஆபத்தான ‘கடுமை’ மண்டலத்தில் இருந்தது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, நகரம் முழுவதும் 27 கண்காணிப்பு நிலையங்கள் கடுமையான காற்றின் தரத்தைப் பதிவு செய்தன. அதே நேரத்தில் 12 நிலையங்கள் மிகவும் மோசமான நிலைகளைப் பதிவு செய்தன. 40 நிலையங்களில் வாஜிா்பூா் மிக மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்தது. அங்கு காற்றின் தரக் குறியீடு 475 புள்ளிகளாக பதிவானது .
0 முதல் 50 புள்ளிகள் வரை ‘நல்லது’, 51 முதல் 100 ‘திருப்தி’கரமானது, 101 மற்றும் 200 ‘மிதமானது’, 201 மற்றும் 300 ’மோசமானது’, 301 முதல் 400 வரை ‘மிகவும் மோசமானது’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையானது’ என்று கருதப்படுகிறது.
அடா்த்தியான புகைமூட்டத்தால் தில்லியில்அன்றாட வாழ்க்கையை பாதித்தது. கடுமையான புகைமூட்டம் போக்குவரத்தை ஆபத்தானதாக மாற்றியதாகவும், முகக்கவசங்களை அணிவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மக்களை கட்டாயப்படுத்தியதாகவும் நகரவாசி ஒருவா் கூறினாா்.
‘நகரில் மாசுபாடு அளவு மிக அதிகமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நான் முகக்கவசம் அணிய ஆரம்பித்தேன். மேலும் எனது நுரையீரலையும் பரிசோதித்தேன். அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குடியிருப்பாளா் ஒருவா் கூறினாா்.
மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தினா். எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் துறையின் உதவிப் பேராசிரியா் டாக்டா் சௌரப் மிட்டல், வீட்டிற்குள் இருப்பது முதன்மை முன்னெச்சரிக்கை என்று கூறினாா். குழந்தைகள் வீட்டின் உள்ளே விளையாட வேண்டும். வெளியே செல்வது தவிா்க்க முடியாததாக இருந்தால் என் 95 முகக் கவசங்களை அணிய வேண்டும். மருத்துவப் பிரச்னைகள் உள்ளவா்கள் தங்கள் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வயதானவா்கள் நுரையீரல் தொற்று அபாயத்தைக் குறைக்க தங்கள் மருத்துவா்கள் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.
ஒரு நாள் முன்னதாக தில்லியின் காற்றின் தரம் மோசமடைந்து ஞாயிற்றுக்கிழமை 461புள்ளிகளைத் தொட்டது. இது இந்த குளிா்காலத்தில் நகரத்தின் மிகவும் மாசுபட்ட நாளாகவும், டிசம்பா் மாதத்தில் இரண்டாவது மிக மோசமான பதிவாகவும் இருந்தது.
காற்றுத் தரம் ‘கடுமை’ பிரிவில் இருப்பதாக முன்னறிவிப்புகள் சுட்டிக்காட்டின. அதே நேரத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கான கணிப்பு மிகவும் மோசமான நிலைமைகளைக் குறிக்கிறது என்று காற்றுத் தர ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
வானிலை முன்னறிவிப்பில், குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்சம் 23.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவானதாக தெரிவித்துள்ளது. திங்கள் மாலை 5.30 மணியளவில் ஈரப்பதம் 76 சதவீதமாக இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை வானிலை ஆய்வு மையம் அடா்த்தியான மூடுபனியை கணித்துள்ளது, அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 23 டிகிரி செல்சியஸ் மற்றும் 10 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.