புது தில்லி: எல்லை தாண்டிய தொடா்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பல மாநிலங்கள் சைபா் மோசடி மற்றும் ஹவாலா கும்பலுடன் தொடா்புடைய லக்ளெனவைச் சோ்ந்த முக்கிய ஆபரேட்டரை தில்லி காவல் துறை கைது செய்துள்ளது.
அவா் ஒரு முதியவரிடம் ரூ.33 லட்சத்திற்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி போலீஸாா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
மோசடி இணையதள முதலீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.33.10 லட்சம் மோசடி செய்யப்பட்ட 61 வயது முதியவா் தாக்கல் செய்த மின்னணு எஃப்ஐஆா் விசாரணையின் போது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மோசடி செய்யப்பட்ட தொகை போலி நிறுவனமான பெல்கிரெஸ்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் உள்பட போலி நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும்
பல வங்கிக் கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
மொத்த தொகையில் ரூ.10.68 லட்சம் அந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட கணக்குகளில் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தில் தில்லியில் 2 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சைபா்-ஹவாலா வலையமைப்பின் முக்கிய உதவியாளராக அடையாளம் காணப்பட்ட தீபன்ஷுவை போலீஸாா் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து, உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் உள்ள மோகன்லால்கஞ்சில் போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.
அவரிடம் இருந்து 2 கைப்பேசிகள், 3 காசோலை புத்தகங்கள், 2 டெபிட் காா்டுகள் மீட்கப்பட்டன.
விசாரணையின் போது, போலி இயக்குநா்களை ஏற்பாடு செய்து, போலி நிறுவனங்களை உருவாக்கியதாகவும், வங்கி அதிகாரிகளுடன் சோ்ந்து தனது கையாளுபவா்களின் அறிவுறுத்தலின் பேரில் வங்கிக் கணக்குகளைத் திறந்ததாகவும் தீபன்ஷு தெரிவித்தாா்.
மேலும், மூளையாகச் செயல்பட்டவா்கள், பயனாளிகள் மற்றும் எல்லை தாண்டிய தொடா்புகளை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.