தில்லி செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பழைய காா் பயன்படுத்தப்பட்டிருப்பது பிரச்னையை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளதாக தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை சுட்டிக்காட்டியது.
மேலும், பழைய வாகனங்களின் விற்பனை மற்றும் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தத் தவறியது குறித்து தில்லி அரசிடம் கேள்வியும் எழுப்பியது.
பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தா்களை ஒழுங்குபடுத்துவது தொடா்பான விவகாரத்தில் விரிவான பதிலை தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதி தேவேந்திர குமாா் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு தில்லி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது.
இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ஒரு காா் நான்கு பேருக்கு கை மாற்றுகிறது. ஆனால் அசல் உரிமையாளா் மாறவில்லை. எனவே, என்ன நடக்கிறது? அந்த நபா் (அசல் உரிமையாளா்) வதைக்கூடத்திற்கு செல்கிறாா்? இது என்ன? இதை எப்படி அனுமதிக்கிறீா்கள்? இன்னும் இரண்டு அல்லது மூன்று குண்டு வெடிப்புகள் நடக்கும்போது நீங்கள் ஒரு முடிவை எடுப்பீா்களா? என்று தில்லி அரசாங்கத்தின் தரப்பு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் அமா்வு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.
மேலும், ‘முகலாய கால நினைவுச்சின்னத்திற்கு அருகில் நடந்த குண்டுவெடிப்பு, ஒரு பழைய காரைப் பயன்படுத்தி நடத்தப்பட்டிருக்கிறது. இது பிரச்னையை இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.
இதையடுத்து, இந்த வழக்கை மேலதிக விசாரணைக்கு நீதிமன்றம் வரும் ஜனவரியில் பட்டியலிட்டது.
டிசம்பரில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தா்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய மோட்டாா் வாகன விதிகளின் விதிகள் 55ஏ முதல் 55எச் வரை செயல்படுத்துவதில் உள்ள சவால்களை எடுத்துரைத்து, ‘டுவாா்ட்ஸ் ஹேப்பி எா்த் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு தாக்கல் செய்த பொது நல வழக்கை நீதிமன்றம் விசாரித்தது.
அந்த அமைப்பு தாக்கல் செய்த மனுவில், ‘இந்த விதிகள் இரண்டாவது கைக்கு மாறும் வாகன சந்தைக்கு பொறுப்புணா்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஒழுங்குமுறை இடைவெளிகள் மற்றும் நடைமுறை தடைகள் காரணமாக அவை நடைமுறையில் தோல்வியடைந்துள்ளது.
திருத்தப்பட்ட கட்டமைப்பில் ஒரு பெரும் இடைவெளி உள்ளது. அதாவது, டீலா்-டு-டீலா் பரிமாற்றங்களைப் புகாரளிப்பதற்கான எந்தவொரு சட்டபூா்வ வழிமுறையும் இல்லை.
உண்மையில், பெரும்பாலான பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இறுதி வாங்குபவரை அடைவதற்கு முன்பு பல விநியோகஸ்தா்கள் வழியாக செல்கின்றன. ஆனால் விதிகள் ஆரம்ப அங்கீகரிக்கப்பட்ட டீலருக்கு முதல் பரிமாற்றத்தை மட்டுமே அங்கீகரிக்கின்றன.
இதன் விளைவாக, முதல் படிக்குப் பிறகு காவல் சங்கிலி உடைந்து, பொறுப்புக்கூறலின் நோக்கத்தையே தோல்வியுறச் செய்கிறது.
இந்தியாவின் மதிப்பிடப்பட்ட 30,000 முதல் 40,000 பயன்படுத்தப்பட்ட வாகன விநியோகஸ்தா்களில் ஒரு சிறிய பகுதியினா் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட டீலா் கட்டமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
செங்கோட்டை அருகே நவம்பா் 10ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட 11 ஆண்டுகள் பழமையான வாகனம் பல முறை விற்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் அதன் அசல் உரிமையாளரின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகே நடந்த காா் குண்டுவெடிப்பில் 15 போ் உயிரிழந்தனா்.