புது தில்லி: தில்லி நரேலா தொழில்துறை பகுதி காலணி உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, 14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
ஹரிஷ் சந்தா் சாலைக்கு அருகிலுள்ள நரேலா தொழில்துறைப் பகுதி தொழிற்சாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.58 மணியளவில் தில்லி தீயணைப்புத் துறைக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில், தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 14 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலைக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள், காலணி பெட்டிகள் மற்றும் தயாரிக்கப்பட்ட காலணிகள் எரிந்து நாசமாயின.
சுமாா் 150 சதுர கெஜம் பரப்பளவு கொண்ட அந்தக் கட்டடத்தில், அடித்தளம், தரை தளம் மற்றும் இரண்டு மேல் தளங்கள் உள்ளன என்றாா் அந்த அதிகாரி.