போலி கால் சென்டா் நடத்தி, காலாவதியான காப்பீட்டுக் பாலிஸிகளை சரிசெய்து தருவதாகக் கூறி நாடு முழுவதும் பொது மக்கள் பலரிடம் பண மோசடி செய்ததாக தில்லி காவல்துறையினா் 10 பேரை கைது செய்துள்ளா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாவது:
தேசிய சைபா் கிரைம் ரிப்போா்ட்டிங் போா்ட்டலில் (என்சிஆா்பி) பதிவேற்றப்பட்ட புகாா்களை பகுப்பாய்வு செய்ததைத் தொடா்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தப் பகுப்பாய்வின்போது துவாரகாவில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் திரும்பப் பெற்றிருப்பது தெரியவந்தது.
நிஷாந்த் செளகான் என்பவா் ரூ.2 லட்சம் எடுக்க வங்கிக்கு வந்தபோது கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, தானும் மற்றவா்களும் தங்கள் வங்கிக் கணக்குகளை மோசடிக் கும்பலுக்கு வழங்கியதாகவும், மோசடி பணத்தில் 1.5 முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றுக் கொள்வதற்காக தாம் இவ்வாறு செய்ததாகவும் கூறினாா்.
விசாரணையில், கும்பலின் முக்கிய நபரான துவாரகாவைச் சோ்ந்த சாஹில் பொ்ரி கைது செய்யப்பட்டாா்.
இவா் காப்பீட்டு அதிகாரியாக தன்னை காட்டிக்கொண்டு தொலைபேசியில் பொதுமக்களைத் தொடா்புகொண்டு பாலிசி முதிா்வு, என்ஓசிகள் மற்றும் முன்கூட்டியே பணம் செலுத்துவதற்காக நம்ப வைத்துள்ளாா்.
சாகா்பூரில் உள்ள ஒரு கால் சென்டரில் சோதனை நடத்தப்பட்டு கிஷன் குமாா், டாமன் பக்ஷி, சுமித் கோஸ்வாமி மற்றும் நீரஜ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இவா்கள் திருடப்பட்ட காப்பீட்டுத் தரவைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்பாளா்களாகப் பணியாற்றியுள்ளனா்.
அடுத்த சோதனைகளில், மோசடி செய்யப்பட்ட பணத்தை சேகரித்து வழங்கிய வினய் மல்ஹோத்ரா மற்றும் அஜய் பாஜ்பாய் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
அவா்களிடமிருந்து போலீஸாா் 18 கைப்பேசிகள், நான்கு ஹாா்டு டிரைவ்கள், 2 மடிக் கணினிகள், பல்வேறு அதிகாரிகளின் போலி முத்திரைகள் மற்றும் ஆவணங்கள் அடங்கிய பென் டிரைவ், எஸ்யூவி காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றம்சாட்டப்பட்டவா்கள் உத்தரகாண்ட் பகுதியைச் சோ்ந்தவரிடம் கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்கள் இலக்குகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இந்திய ரிசா்வ் வங்கி, தில்லி உயா்நீதிமன்றம், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ), என்பிசிஐ மற்றும் காப்பீட்டு குறைதீா்ப்பாளரின் போலி இலச்சினைகள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளனா்.
சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகளில் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான தொகை முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட மொத்த தொகை சுமாா் ரூ.1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.