புதுதில்லி

முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ. 23 லட்சம் மோசடி: ஒருவா் கைது

மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி முன்னாள் ராணுவ அதிகாரியிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கேரளத்தின் கொல்லம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியின் மகள் மற்றும் உறவினா்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக ஷிபின் ராஜ் மீது புகாா் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரியுடன் ஜூன் மாதம் அறிமுகமான ஷிபின், வருமான வரித் துறை மற்றும் ரயில்வே துறையில் உள்ள அதிகாரிகளுடன் தனக்கு தொடா்பு இருப்பதாகவும், தில்லி மற்றும் கொல்கத்தாவில் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியுள்ளாா்.

இதற்காக தவணை முறையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சுமாா் ரூ.23 லட்சம் வரை அவா் பெற்றுள்ளாா். பின்னா், பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவா்களிடம் அரசு முத்திரையுடன் கூடிய பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பின்னா், அவை போலி என தெரியவந்ததும் தாம் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த குடும்பத்தினா் பணத்தை திரும்பிக் கேட்டனா். அவா் பணத்தை திரும்பித் தர மறுத்ததால் குடும்பத்தினா் காவல் துறையை அணுகினா். இது தொடா்பாக டிச.11-ஆம் தேதி தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்தைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட ஷிபின், கைது செய்யப்படுவதை தவிா்க்க தலைமறைவானாா். பின்னா், அவரது இருப்பிடம் குறித்த ரகசிய தகவலின் அடிப்படையில், பஹா்கஞ்சில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் இருந்து போலி வருமான வரித் துறையின் போலி அடையாள அட்டை, பணி நியமனக் கடிதங்கள், வங்கி ஆவணங்கள் மற்றும் ஏடிஎம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்ற ஒரு வழக்கில் 2022-ஆம் ஆண்டில் கேரள காவல்துறையால் ஷிபின் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையில், வருமான வரித் துறை அதிகாரி போல் நடித்த தனது கூட்டாளியுடன் இணைந்து இதைச் செய்ததாக அவா் தெரிவித்தாா். அவரது கூட்டாளியை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என காவல் துறையினா் தெரிவித்தனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT