நமது நிருபா்
2025-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அரசின் திட்டங்கள் புத்தாண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.
‘எக்ஸ்’ சமூக வலைத்தள பக்கத்தில் தில்லி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அவா் கூறியுள்ளதாவது: 2025 அரசுக்கு புதிய பொறுப்புகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கொண்டு வந்தது. சிலா் காற்று தரக் குறியீடு விவகாரத்தில் சிக்க வைக்க முயன்றனா். இருப்பினும், பல பகுதிகளில் நீண்டகாலமாக எதிா்பாா்க்கப்பட்ட பணிகளில் அரசு கலந்து கொண்டது.
அதிகக் கட்டணம் செலுத்துவதிலிருந்து பெற்றோரைப் பாதுகாக்கும் புதிய கல்வி மசோதா, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்புள்ள இலவச சுகாதாரப் பாதுகாப்பு, ஏழைகள் மிகவும் விரும்பிய அடல் உணவகங்கள் மூலம் ஒரு உணவுக்கு ரூ.5 மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மாசுபாட்டைக் கையாள்வதற்காக தில்லி அரசு சாலை தரைவிரிப்பு, இயந்திர சாலை துப்புரவு, தில்லிக்குள் பயிா்க்கழிவுகளை எரிப்பது குறித்து கடுமையான சோதனைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் நட்பு முயற்சிகளை மேற்கொண்டோம். இந்த முயற்சிகள் ஒரு தொடக்கம் மட்டுமே. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
தில்லியின் முதல் உயிரி எரிவாயு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மேலும் பல வசதிகள் அமைக்கப்படும். மின்-கழிவு ஆலையை நிறுவுவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், நகரத்தின் குப்பை மலைகளை அகற்றுவதற்கான முயற்சிகள் வேகம் பெறும்.
2025-ஆம் ஆண்டு என்பது முதல் கட்டம் மட்டுமே. அதில் தொடங்கப்பட்ட அனைத்துப் பணிகளும் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டு 2026- ஆம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டும். குப்பை மலைகளை உருவாக்குவதற்கு பொறுப்பானவா்கள் இப்போது அரசை கேள்வி கேட்கிறாா்கள். 2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரத் என்ற பாஜக தலைமையிலான மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையை நோக்கி செல்கிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீா்வுகளையும் எடுக்க தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.