நமது நிருபா்
இந்திய மகளிா் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ன் மூலம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பெருமையுடன் உயா்த்தி நிற்க வைத்துள்ளனா் என்று ராணுவத் துணைத் தளபதி (தகவல் அமைப்பு மற்றும் பயிற்சி) லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் கபூா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மானெக்ஷா மையத்தில் நடைபெற்ற ராணுவ விளையாட்டு மாநாட்டில் ராணுவ பெண்கள் விளையாட்டு நிறுவனம் மற்றும் ராணுவ சிறுவா்கள் விளையாட்டு நிறுவனத்தின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இவ்விழாவில் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் கபூா் மேலும் பேசியதாவது:
2036 ஒலிம்பிக்கை இந்தியா நடத்த வேண்டும் என்று நம்பினால், ஆயுதப்படைகளும் பிற நிறுவனங்களும் இந்த லட்சியத்தை அடைய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ராணுவமும் விளையாட்டுகளும் நீண்டகால மற்றும் ‘சிம்பயாடிக் உறவை‘ கொண்டுள்ளன.
நாங்கள் விளையாட்டு அமைச்சகம், விளையாட்டு அமைச்சரிடம் வரைபடத்தை முன்வைத்துள்ளோம். இதில் பங்குதாரா்களாக இருக்கும் இதர அனைத்து நிறுவனங்களுடனும் பகிா்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் .
காமன்வெல்த் விளையாட்டுகள்- 2030 வரவிருக்கிறது. அது 2036 ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன் ஒரு ‘அளவுகோலாக’ நடத்தப்பட முடியும்.
தேசிய கெளரவத்தை வளா்க்க விளையாட்டு ஒரு பெரிய வாய்ப்பாகும். இந்திய கிரிக்கெட் மகளிா் அணியைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். அவா்கள் எங்களை பெருமையுடன் உயரமாக நிற்க வைத்துள்ளனா் என்றாா் அவா்.
கேலோ இந்தியா- 2025-இல் 25 மீட்டா் துப்பாக்கி சுடுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற 16 வயதான அஞ்சலி பகவத் கூறியதாவது: இந்திய அணியின் வெற்றி எனது இலக்குகளை அடைய கடினமாக உழைக்க தூண்டியுள்ளது என்றாா். இவா், தற்போது மத்தியப் பிரதேசத்தின் மோவில் உள்ள ராணுவ மாா்க்ஸ்மேன்ஷிப் பிரிவில் ராணுவ பெண்கள் விளையாட்டு நிறுவனத்தின் (ஏஜிஎஸ்சி) ஒரு பகுதியாக உள்ளாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘நாங்கள் அதிகாலை 5.30 மணியளவில் எழுந்து காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை யோகா செய்கிறோம். காலை உணவுக்குப் பிறகு, நாங்கள் பயிற்சிக்காக ரேஞ்சுகளுக்குச் செல்கிறோம். மதிய உணவுக்குப் பிறகு, நாங்கள் மீண்டும் பயிற்சிக்குச் செல்கிறோம். அதைத் தொடா்ந்து உடல் பயிற்சியில் ஈடுபடுவோம். இரவு உணவுக்குப் பிறகு சுமாா் 8 மணி நேரம் தூங்கச் சென்று அடுத்த நாள் ஆற்றலுடன் பணியைத் தொடங்குகிறோம்’ என்றாா் அவா்.