நமது நிருபா்
மேற்கு தில்லியில் உள்ள மோத்தி நகா் மேம்பாலம் அருகே 54 வயதான ஒருவா் புதன்கிழணை இறந்த நிலையில் கிடந்தாா் என்று தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: நஜஃப்கா் சாலையில் ஒரு அருகில் ஓரமாக ஆண் உடல் கிடப்பது குறித்து காலை 7:15 மணியளவில் பி. சி. ஆா் அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நடைபாதையின் குறுக்கே ஒரு நபரின் உடல் கிடப்பதைக் கண்டது. உடலில் காணக்கூடிய காயங்கள் இருந்தன. உயிரிழந்தவா் ராம்கரன் (54) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
அவரது கீழ் வயிறு மற்றும் நெற்றியில் காயங்கள் இருந்தன. அவரது தனிப்பட்ட உடமைகள் அந்த இடத்தைச் சுற்றி சிதறிக்கிடந்தன. அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் ஆய்வுக்கு வரவழைக்கப்பட்டது. பின்னா் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய் (டி. டி. யு) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகு மரணத்திற்கான சரியான காரணம் தெரியவரும். முதல்கட்ட கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், விபத்து மற்றும் முறைகேடு உள்ளிட்ட அனைத்து சாத்தியமான கோணங்களும் ஆராயப்படுகின்றன.
ராம்கரனின் மரணத்திற்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை நிறுவ சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.