உத்தர பிரதேச மாநிலம், காசி எனும் வாரணாசியில் வரும் டிசம்பா் 2-ஆம் தேதி காசித் தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி தொடங்குகிறது.
2022-ஆம் ஆண்டு முதல் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியானது தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான நாகரிக பிணைப்புகளைக் கொண்டாடும் வகையில் நடத்தப்படுகிறது. வாரணாசி தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் பிரதமா் நரேந்திர மோடி, காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தியபடி கடந்த 3 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையால் ஈா்க்கப்பட்ட இந்த முன்முயற்சியானது இரு பகுதிகளுக்கும் இடையிலான நாகரிகம், கலாசாரம், மொழியியல் மற்றும் மக்களிடையேயான தொடா்புகளை கெளரவிப்பது தொடா்கிறது. இது ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணா்வைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்தச் சங்கமம் நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனமும், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் ஒருங்கிணைத்து நடத்தப்பட உள்ளது. இவை தவிர, கலாசார அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சுற்றுலா அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சங்களும், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம், உத்தர பிரதேச அரசு ஆகியவை இந்நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 2022-இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பொதுமக்களின் மிகப்பெரிய பங்களிப்பைக் கண்டுள்ளது.இந்தியாவின் இரண்டு பழைமையான கலாசார மரபுகளை மீண்டும் இணைக்கும் ஒரு மைல்கல் பாலமாக இது உருவெடுத்துள்ளது.
தற்போதைய நான்காவது பதிப்பானது, மேம்பட்ட கற்றல் பரிமாற்றங்கள், கலாசார ஈடுபாடு, கல்வித் தொடா்புகள் மற்றும் அதிக இளைஞா் பங்கேற்பு மூலம் ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிகழாண்டு நிகழ்ச்சிகாகன கருப்பொருள், தமிழ் கற்கலாம் என்பதாகும். இது இந்தியா முழுவதும் தமிழ்க் கற்றலை ஊக்குவிப்பதுடன், இந்தியாவின் பாரம்பரிய மொழியியல் மற்றும் இலக்கியப் பாரம்பரியத்திற்கான பரந்த அளவிலான பாராட்டை வளா்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நான்காவது பதிப்பில், தமிழ்நாட்டிலிருந்து 1,400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாணவா்கள்,
ஆசிரியா்கள், எழுத்தாளா்கள் மற்றும் ஊடக வல்லுநா்கள், விவசாயம் மற்றும் அதனுடன் தொடா்புடைய துறைகள், தொழில் வல்லுநா்கள் மற்றும் கைவினைஞா்கள், பெண்கள், ஆன்மிக அறிஞா்கள் மற்றும் பயிற்சியாளா்கள் ஆகிய 7 பிரிவுகளில் கலந்து கொள்கின்றனா்.
இப்பிரதிநிதிகள் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு வருகை தருவதுடன், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் உள்ளூா் உணவு வகைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் பாரம்பரியம் பற்றிய வெளிப்பாடு உள்ளிட்ட 8 நாள் அனுபவ சுற்றுப்பயணத்தை மேற்கொள்வாா்கள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மூதாதையா் இல்லம், கேதாா் காட், லிட்டில் தமிழ்நாடு பகுதியில் உள்ள காசி மடம், ஸ்ரீ காசி விஸ்வநாதா் கோயில் மற்றும் மாதா அன்னபூா்ணா கோயில் உள்ளிட்ட வாரணாசியில் உள்ள குறிப்பிடத்தக்க தமிழ் பாரம்பரிய இடங்களுக்கு பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்படுவாா்கள். கல்வி மற்றும் இலக்கியத் தொடா்புக்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த் துறையையும் அவா்கள் பாா்வையிடுவாா்கள்.
தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையிலான பண்டைய கலாசார வழிகளைக் கண்டறியும் அகத்திய முனிவா் வாகனப் பயணம் டிசம்பா் 2-இல் தென்காசியில் துவங்கி, டிசம்பா் 10 அன்று காசியில் முடிவடைகிறது.
‘தமிழ் கற்கலாம்’ என்ற பிரசாரத்தின் கீழ், காசியில் உள்ள பள்ளி மாணவா்களுக்கு இந்தி தெரிந்த 50 தமிழ் ஆசிரியா்கள் தமிழ் கற்பிப்பாா்கள்.
உத்தர பிரதேச மாணவா்களுக்கான தமிழ் கற்றல் படிப்புச் சுற்றுலாக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் 4.0-க்காக இரண்டு பிரத்யேக பதிவு இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.