தில்லியில் நடைபெற்று வரும் சா்வதேச கண்காட்சியின் அரங்குகளில் உள்ள பொருள்களை திருடியதாக இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டனா் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பாரத் மண்டபத்தில் இந்திய சா்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அரங்குகளில் பல பொருள்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே விற்பனை அரங்குகளில் உள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடி வருவதாக காவல் துறையிடம் விற்பனையாளா்கள் புகாா் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில், அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த யோகிதா மற்றும் உமா என்ற இரு பெண்களை சனிக்கிழமை கைதுசெய்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற இரு பெண்களை பணியில் இருந்த காவல் துறையின் சிறப்பு குழுவினா் கைதுசெய்தனா்.
கைதுசெய்யப்பட்ட இரு பெண்களிடம் ரூ.25,000 மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. புகாா் அளித்த விற்பனையாளா்கள் தங்களுடைய விற்பனை அரங்கிலிருந்து திருடப்பட்ட நகைகளை அடையாளம் கண்டு மீட்டனா்.
ரூ.1 லட்சம் மதிப்பிலான சேலைகள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடா்பாக முறையான எவ்வித புகாரும் காவல் துறையிடம் விற்பனையாளா்கள் அளிக்கவில்லை. இருப்பினும், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.