நமது நிருபா்
அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று தில்லியில் நடைபெற்ற ரயில்வே துறைக்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினா் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளாா்.
தில்லியில் நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் அத்துறைக்கான ஆலோசனைக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அத்துறையின் இணை அமைச்சா், ரயில்வே வாரியத் தலைவா், உயா் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இதில் பங்கேற்ற பின்னா் சு. வெங்கடேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 18-ஆவது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு ஒன்றே முக்கால் ஆண்டுகள் ஆகிவிட்டது. மிக தாமதாக முதல் முறையாக இப்போதுதான் ரயில்வே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. மற்ற துறைகள் ஏற்கெனவே இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளன. இதை கூட்டத்தில் சுட்டிக்காட்டினோம். இந்திய ரயில்வே வளா்ச்சிக்கு அடிப்படையானது சம பங்களிப்பு என்பதை புள்ளி விவரங்களுடன் எடுத்துவைத்தோம்.
குறிப்பாக பிற ரயில்வேகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஒப்பிட்டால் தெற்கு ரயில்வேக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்படுவதாக சுட்டிக்காட்டினோம். 2024-2025 திருத்தியமைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களுக்கு திட்டங்களை அள்ளி வழங்குவதும், கேரளம், தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டும் போக்கும் தொடா்கிறது. நிகழாண்டில் பிரதமா் கதிசக்தி சிறப்புத் திட்டத்தின்கீழ் மகராஷ்டிரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் 18 மாவட்டங்களை இணைக்கும் ரயில் திட்டத்திற்கு ரூ.24,638 கோடியும், பிகாரை மையப்பத்திய திட்டத்திற்கு ரூ.2,192 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தகைய எந்தவொரு சிறப்புத் திட்டமும் நிகழாண்டில் தமிழகத்துக்கோ கேரளத்துக்கோ வழங்கப்படவில்லை.
தெற்கு ரயில்வேக்கு அப்பட்டமான பாரபட்சம் காட்டப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல திட்டங்களை ஒதுக்குகிற ரயில்வே துறை தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் வஞ்சமிழைப்பதை நிறுத்த வேண்டும். வரும் பட்ஜெட்டிலாவது தெற்கு ரயில்வேக்கும், புதிய வழித்தடத்திற்கும், மற்ற புதிய திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறோம்.
ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்குவது, மூத்த குடிமக்களுக்கான பயணக் கட்டணச் சலுகையை உடனடியாக வழங்குவது, ரயில்வே திட்டங்கள் தொடா்புடைய புள்ளி விவரங்கள் அடங்கிய பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிடுவது, திறந்த வெளிப்படையான நிா்வாகத்தை உறுதிப்படுத்துவது, தெற்கு ரயில்வேயில் உள்ள 9 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்குவது, ரயில்வே ஓட்டுநா்கள் காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப அனுமதிப்பது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மதுரையில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்குதல் குறிப்பாக கோயம்புத்தூரின் போத்தனூா், மதுரை கூடல் நகா் ஆகியவை 2-ஆவது முனையமாக மாற்றப்பட வேண்டும்.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு சரக்குகள் எடுத்துச்செல்வதற்கான அனைத்து வாகனங்களும் மதுரை ரயில் நிலையம் வழியாகச் செல்வதால் அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக மதுரையில் ஒரு பைபாஸ் சரக்கு வழித்தடத்தை சோழவந்தானில் இருந்து செவரக்கோட்டை வரை உருவாக்குவதற்கான வரைபடத்துடன் கூட்டத்தில் சமா்ப்பித்தேன். இதுதவிர பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுவையும் அமைச்சரிடம் அளித்தேன். பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே அமைச்சா் தெரிவித்தாா் என்றாா் வெங்கடேசன்.