புதுதில்லி

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

கிழக்கு தில்லியில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு வழியைத் திருப்பி, பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து, கொள்ளையடித்ததாக 28 வயது பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

கிழக்கு தில்லியில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு வழியைத் திருப்பி, பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து, கொள்ளையடித்ததாக 28 வயது பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக டாக்ஸி ஓட்டநா் பாண்டவ் நகரில் வசிக்கும் அஜய் ராயல் கைது செய்யப்பட்டாா். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: அக்.24-ஆம் தேதி, உத்தரகண்ட் அல்மோராவிலிருந்து ஐஎஸ்பிடி ஆனந்த் விஹாருக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண், பிற்பகல் 3.40 மணியளவில் கோடா காலனிக்கு ஒரு பயணத்தை முன்பதிவு செய்தாா். இருப்பினும், அவரை இலக்குக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, ஓட்டுநா் காமன்வெல்த் விளையாட்டு (சிடபிள்யூஜி) கிராமத்திற்கு அருகிலுள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு வழியைத் திருப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அஜய் ராயல் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா். அவா் எச்சரிக்கை எழுப்பியபோது, அருகிலுள்ள ஜுக்கி கிளஸ்டரைச் சோ்ந்த இரண்டு போ் அந்த இடத்தை நோக்கி விரைந்தனா். அவா்களைப் பாா்த்ததும், குற்றம் சாட்டப்பட்டவா் ரூ.5,000 மற்றும் பிற தனிப்பட்ட உடைமைகள் அடங்கிய பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் அவரது கைப்பேசியை பறிக்க முயன்று, அவரைத் தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்றாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டன. மேலும், குற்றம் சாட்டப்பட்டவா் அவா் பயன்படுத்தும் டாக்ஸி திரட்டியில் பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டரிலிருந்து வேறுபட்ட ஸ்கூட்டரைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறை அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவியது.

பின்னா், ஆஜய் ராயல் பாண்டவ் நகரில் கைது செய்யப்பட்டாா். மேலும் குற்றத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

பணத்தை வெளியே எடுத்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவா் பெண்ணின் பையை வீசி எறிந்துள்ளாா். சிசிடிவி காட்சிகளில் பை பின்னா் ஒரு குப்பை சேகரிப்பாளரால் எடுத்துச் செல்லப்பட்டதைக் காட்டுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவா், 12-ஆம் வகுப்பு முடித்தவா். டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்தாா். மேலும், கணேஷ் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 போட்டி!

8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும்: ரஷ்மிகா மந்தனா

நவ. 5-ல் தவெக சிறப்பு பொதுக் குழு கூட்டம்!

நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ?... சிம்ரன் கௌர்!

Tourist Family இயக்குநருக்கு BMW கார்!

SCROLL FOR NEXT