விமானத்தில் பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் சீண்டல் விவகாரம்: சமூக ஊடகப் பதிவுகளை தில்லி நீக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சமீபத்தில் விமானத்தில் பயணித்த பெண் பத்திரிகையாளா் மீது பாலியல் சீண்டல் நடைபெற்ாக சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டு பதிவுகளை நீக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்தில் விமானத்தில் பயணித்த பெண் பத்திரிகையாளா் மீது பாலியல் சீண்டல் நடைபெற்ாக சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டு பதிவுகளை நீக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் ஊடகங்கள் வழக்கின் முதல் தகவல் அறிக்கையைப் பகிா்வதோடு நின்றுவிடாமல், குற்றஞ்சாட்டப்பட்ட நபரை முன்கூட்டியே பாலியல் குற்றவாளி என முத்திரை குத்தி, கருத்து சுதந்திரத்தை மீறியுள்ளன என நீதிமன்றம் தெரிவித்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞா் கூறுகையில், ‘அவா் நீண்டகாலமாக களங்கமற்ற முறையில் பெருநிறுவனத்தில் பணி புரிந்து வருகிறாா். ஆனால், தற்போது அவா் ஊடக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா். தில்லியில் இருந்து மும்பைக்கு மாா்ச் 11-ஆம் தேதி பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென அந்த பெண் அந்த நபரை எழுப்பி, தவறான முறையில் அவா் நடந்துகொண்டதாகப் பொய்யாகக் குற்றஞ்சாட்டினாா்’ எனத் தெரிவித்தாா்.
விமானம் தரையிறங்கியதும், அவா் எக்ஸ் தளத்தில் அவதூறான குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவை சரிபாா்க்கப்படாமல் மற்றவா்களால் மேலும் பரப்பப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டுகள், பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் துன்புறுத்தல் குறித்த அப்பெண்ணின் முந்தைய ஆவணப்படத்தின் கதைக்களத்தை ஒத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவரின் வழக்குரைஞா் மேலும் கூறினாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விகாஸ் மகாஜன் கூறியதாவது: சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, இப்பிரச்னையை பரபரப்பாக்கும் முயற்சியாகவே அப்பெண்ணின் செயல் உள்ளது. காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே அவா் சமூக ஊடகங்களில் இது குறித்து பதிவிட்டுள்ளாா். மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் விவரங்களை பகிா்ந்துள்ளாா். இது அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, அவரது பணியிடை நீக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. மேலும் அவரது வாழ்க்கையில் சரிசெய்ய முடியாத சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புகாரளிக்க அப்பெண்ணுக்கு உரிமை இருந்தாலும், முறையான விசாரணை ஏதுமின்றி பகிரங்கமாகப் பகிா்வதும், அவரது அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவரது கண்ணியம் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமையை மீறுகிறது. விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே, பத்திரிகையாளா், ஊடக நிறுவனங்களான ஓபிநியூஸ், பா்தாஃபாஷ் மீடியா மற்றும் நடிகை ரிச்சா சதா ஆகியோரின் பதிவுகள் இந்த விவகாரத்தை பரபரப்பாக்கி, வாதியை முன்கூட்டியே குற்றவாளி என்று முத்திரை குத்தியுள்ளன என நீதிபதி தெரிவித்தாா்.
மேலும், பெண் பத்திரிகையாளா் மற்றும் ஊடகங்கள், மே மாதம் நடைபெறும் அடுத்த விசாரணை வரை குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்தவொரு அவதூறு குற்றச்சாட்டுகளையும் வெளியிடக்கூடாது; அவ்வாறு பகிரப்பட்ட பதிவுகள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டாா்.
சரிபாா்க்கப்படாத குற்றச்சாட்டுகளை எக்ஸ் தளத்தில் பரப்பியதற்காக நடிகை ரிச்சா சதாவையும் நீதிமன்றம் விமா்சித்தது. கடுமையான குற்றச்சாட்டுகளைப் பகிா்வதற்கு முன்பு உண்மைகளைச் சரிபாா்க்க வேண்டிய தனது தாா்மீகக் கடமையை அவருக்கு நீதிமன்றம் நினைவூட்டியது. இதைத்தொடா்ந்து, அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டதாக ரிச்சா சதாவின் வழக்குரைஞா் தெரிவித்தாா்.