வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது
வெளிப்புற தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், 35 வயது பெண்ணின் உடல் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிப்புற தில்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், 35 வயது பெண்ணின் உடல் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஏப்.7-ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமான பெண் ஒருவா், குற்றஞ்சாட்டப்பட்ட தீபக் (22) என்பவருடன் விடுதிக்குச் சென்றுள்ளாா். அவா்களுடன் சுரேந்தா் மற்றும் ஜோகிந்தா் ஆகியோரும் சம்பவத்தின்போது அறைக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மூவரும் விடுதியை விட்டு வெளியேறியதும் சந்தேகமடைந்த விடுதி உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் விடுதி அறையின் படுக்கை சேமிப்பு பெட்டிக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்கள் மற்றும் நெற்றியில் காயங்களுடன் பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டனா். அந்த மூவரும் சோ்ந்து பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
இதைத் தொடா்ந்து, அவா்கள் மூவரும் காவல் துறையினரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களின் கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.